‘இதை மட்டும் வச்சு அவங்கள குறைச்சு மதிப்பிடாதீங்க’!.. இந்தியா மீது விழும் விமர்சனம்.. தரமான பதிலடி கொடுத்த வில்லியம்சன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததற்காக இந்திய அணியை பலரும் விமர்சித்து வரும் நிலையில், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனம் இந்தியாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. போட்டியை டிரா செய்வதற்கான சூழல் இருந்தும் இந்திய அணி கோட்டை விட்டதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கேப்டன் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்திய அணிக்கு ஆதரவாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்த ஒரு போட்டியின் மூலம் வெற்றியாளரை தேர்வு செய்தது சரிதான். இறுதிப்போட்டியில் இரு அணிகளுமே தங்களது திறமையை வெளிப்படுத்தின. அதில் எங்கள் அணி வெற்றி பெற்றதை பெருமையாக நினைக்கிறோம்.
ஆனால் இந்த ஒரு தோல்வியை மட்டும் வைத்து இந்திய அணியை விமர்சிப்பது தவறு. பல ஆண்டுகளாக வெற்றிகரமான அணியாக திகழும் இந்திய அணி, இன்னும் நிறையை கோப்பைகளை வெல்லும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அதனால் இந்திய அணியின் தரத்தை ஒரு போட்டியின் மூலம் குறைத்துக் கூறக்கூடாது.
இந்தியா முற்றிலும் உலகத்தரம் வாய்ந்த அணி. அந்த அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலுமே இந்திய அணி பலமாக உள்ளது’ என கேன் வில்லியம்சன் கூறியுள்ளார். இந்திய அணியை பலரும் விமர்சித்தும் வரும் நிலையில், இந்தியாவுக்கு சப்போர்ட் செய்து கேன் வில்லியம்சன் பேசியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது நீண்டகால நண்பர் என கேன் வில்லியம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.