இலங்கைக்கு எதிரான தொடரில் ‘நட்டு’ பெயர் இல்லை.. இதுதான் காரணமா..? ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி வரும் ஜூலை 13-ம் தேதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை நேற்று பிசிசிஐ அறிவித்தது. அதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கேப்டனாகவும், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் துணைக் கேப்டனாகவும் நியக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஐபிஎல் தொடரில் அசத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சஹார், தேவ்தத் படிக்கல், இஷான் கிஷான், ப்ரித்வி ஷா உள்ளிட்ட இளம்வீரர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக இந்திய அணியில் விளையாட இருந்த தனது முதல் வாய்ப்பை தவறவிட்ட தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியும் இதில் இடம்பிடித்துள்ளார்.
ஆனால் மற்றொரு தமிழக வீரரான நடராஜனின் பெயர் இதில் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரில் விளையாடியபோது நடராஜனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் தொடரின் பாதியிலேயே விலகி அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சை முடிந்து தற்போது அவர் ஓய்வில் உள்ளதால் இலங்கை தொடரில் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் இங்கிலாந்து தொடரின்போது இந்திய அணியின் இளம்வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவரும் அந்த தொடரின் பாதியிலேயே விலகி அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கூட அவர் விளையாடவில்லை. ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரிஷப் பந்த் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இன்னும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் குணமடையாததால், அவரும் இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.