‘அடி தூள்’!.. டி20 உலகக்கோப்பை இங்கதான் நடக்கப் போகுதா..? கசிந்த தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடர் எங்கு நடைபெற உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை அடுத்து டி20 உலகக்கோப்பை தொடர் எப்போது நடைபெறும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்திருந்தது.
ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் இந்த ஆண்டு நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடரும் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். அதனால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் வங்கதேசம், நெதர்லாந்து, இலங்கை, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நமீபியா, ஓமன் மற்றும் பப்புவா நியூ ஜெனிவா ஆகிய நாடுகள் மோதுகின்றன. இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், டாப் 8 அணிகளுடன் இணைந்து சூப்பர் 12 சுற்றில் விளையாடும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் முடிந்தபின், வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கும் என்றும், நவம்பர் 14-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்றும் ESPNcricinfo ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து ஐசிசியிடமிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
