‘அவரு என் மேல வச்ச நம்பிக்கை, இப்போ உள்ள KKR அணி வைக்கல’!.. அணியில் சரியாக வாய்ப்பு கிடைக்காத ஆதங்கம்.. பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த குல்தீப்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணியில் சரியாக வாய்ப்பு கிடைக்காத ஆதங்கத்தை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 29 லீக் போட்டிகளே முடிவடைந்துள்ளன. இதனால் எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது.
இந்த நிலையில் Sportskeeda ஊடகத்துக்கு பேட்டியளித்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ஐபிஎல் தொடரில் தனக்கு சரியாக வாய்ப்பு கிடைக்காத ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், ‘இந்திய அணிக்காகவே விளையாடி வரும் எனக்கு உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்காக வருத்தப்பட முடியுமே தவிர, என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது. இதுகுறித்து அணி நிர்வாகத்திடம் சரியான காரணம் கேட்கலாம். அதற்கு அவர்கள் பதில் தருவார்கள் என நம்புகிறேன்.
கவுதம் கம்பீர் என் மேல் வைத்த நம்பிக்கை, தற்போது இருக்கும் கொல்கத்தா அணிக்கு என் மீது இல்லை என நினைக்கிறேன். சர்வதேச கிரிக்கெட் போட்டியில், எப்படியாவது சிறப்பாக விளையாடி தொடரை வென்றுவிட வேண்டும் என்ற ஆர்வம் விராட் கோலியிடம் இருக்கும். அதே எண்ணம்தான் கவுதம் கம்பீரிடமும் இருந்தது. ஆனால் தற்போதுள்ள கொல்கத்தா அணிக்கு அந்த எண்ணம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். தோற்றால் அடுத்து என்ன செய்வது என்ற வகையிலேயே அவர்கள் யோசிக்கின்றனர்’ என குல்தீப் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள குல்தீப் யாதவ்-க்கு, கடந்த இரண்டு ஐபிஎல் தொடரில் சரியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்-ல் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை. ஐபிஎல் தொடரை போலவே இந்திய அணியிலும் போதிய வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
