“கடவுள் மாதிரி வந்து ரெய்னா ஹெல்ப் பண்ணார்”.. உருக்கமாக பேசிய SRH இளம் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசுரேஷ் ரெய்னா தனக்கு கடவுள் போல் உதவியதாக SRH அணியின் இளம் வீரர் உருக்கமாக பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இளம் வீரர்கள் பலரும் அற்புதமாக விளையாடி வருகின்றனர். அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகியும் ஒருவர். நடப்பு ஐபிஎல் தொடரில் அவருக்கு இன்னும் ப்ளேயிங் லெவலின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கடந்த 2021-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பாக கார்த்திக் தியாகி விளையாடினார். அப்போது பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய கார்த்திக் தியாகி வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்து வெற்றியைத் தேடி கொடுத்தார். இதனை அடுத்து நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி 4 கோடி ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்த நிலையில் தனது ஆரம்பகால கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா உதவியதாக கார்த்திக் தியாகி கூறியுள்ளார். அதில், ‘எப்போதும் நான் ஒன்று சொல்வேன். எனது அண்டர்-16 கிரிக்கெட்டுக்கு பின் சுரேஷ் ரெய்னா கடவுள் மாதிரி உதவிகளை செய்தார். அதன் காரணமாக ரஞ்சி கோப்பையில் தேர்வான என்னை நிறைய பேர் அடையாளம் கண்டனர். எனக்கு 13 வயது இருந்தபோது 14 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் வாழ்க்கை தொடங்கியது. அதன்பின் அண்டர்-16 நிலைமைக்கு முன்னேறிய நான் 7 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்தேன்.
அப்போதுதான் முதல்முறையாக என்னை பற்றி தேர்வுக் குழுவினர் அறிந்தனர். அந்த தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினோம். ஆனால் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து விட்டோம். அந்த நேரத்தில் பயிற்சியாளர் ஞானேந்திரன் பாண்டே, வரும் காலங்களில் வாய்ப்பு தருகிறேன் என்று நம்பிக்கை ஊட்டினார். அதன்பின் மாநில அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாட இருந்த போது பயிற்சிக்காக வந்த சுரேஷ் ரெய்னாவை முதல் முறையாக பார்த்தேன்.
அன்றைய நாளில் பயிற்சியை முடித்துவிட்டு கிளம்பிய அவர், மீண்டும் மைதானத்திற்கு வந்து என்னிடம் பேசினார். அப்போது நான் பந்து வீச்சாளர் என என்னை அறிமுகப்படுத்தினேன். உடனே அவருக்கு எதிராக பந்துவீசும் வாய்ப்பை வலைப்பயிற்சியில் கொடுத்தார். அந்த பயிற்சிக்குப் பின் எனது செயல்பாடுகளை பார்த்த அவர், உனது பவுலிங் சிறப்பாக உள்ளது. வருங்காலங்களில் உறுதியாக உனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று கூறினார். சுரேஷ் ரெய்னா போன்ற ஒருவர் அப்படி கூறியது எனக்கு நல்ல உணர்வுகளை கொடுத்தது.
முதலில் அது ஜோக்காக இருக்குமோ என்று கூட நினைத்தேன். அவர் கூறியதை அந்த சமயத்தில் என்னால் நம்ப முடியவே இல்லை. அதன்பின் ரஞ்சி கோப்பைக்கான உத்தரபிரதேச அணியில் எனது பெயரும் இடம்பெற்றது ஆச்சரியமாக இருந்தது. ரஞ்சி கோப்பையில் வாய்ப்பு பெற்ற நான் அதன்பின் அண்டர்-19 உலகப்கோப்பையில் விளையாடினேன்’ என கார்த்திக் தியாகி கூறியுள்ளார்.
Also Read | “பெட்டியை உடனே திறந்திராதீங்க”.. இரிடியம் என நம்பி திறந்த முதியவர்.. ஆனா உள்ள என்ன இருந்தது தெரியுமா?