வேட்டி.. வேட்டி.. வேட்டி கட்டு.. பிரபல CSK வீரருக்கு.. 'தமிழ்' முறைப்படி நடந்த 'PRE WEDDING' கொண்டாட்டம்.. குத்தாட்டம் போட்ட சென்னை வீரர்கள்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் கடுமையாக திணறி வருகிறது.
இதுவரை ஆறு போட்டிகள் ஆடியுள்ள சிஎஸ்கே, அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. ஒரு சில போட்டிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தும், அனுபவமில்லாத பந்து வீச்சின் பெயரில் வெற்றி வாய்ப்பினை கோட்டை விட்டிருந்தது.
தொடர்ந்து, தங்களின் அடுத்த லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் வியாழக்கிழமை (21.04.2022) அன்று சந்திக்கவுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை ஆடியுள்ள ஆறு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால், சென்னை மற்றும் மும்பை மோதும் போட்டியில், தோல்வி அடையும் அணி, ஏறக்குறைய பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விடும் என தெரிகிறது.
Pre Wedding கொண்டாட்டம்
இந்நிலையில், சென்னை அணியிலுள்ள பிரபல வீரருக்கு நடந்த Pre Wedding கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஐபிஎல் ஏலம் நடைபெற்றிருந்தது. இதில், பல வீரர்களை புதிதாக சென்னை அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
அதில், நியூசிலாந்து அணியைச் சேர்ந்த டெவான் கான்வேவும் ஒருவர். அவரை ஒரு கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்திருந்தது. பாப் டு பிளெஸ்ஸிஸ் இல்லை என்பதால், அவருக்கு பதிலாக தொடக்க வீரர் இடத்தில் கான்வே பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால், ஒரு போட்டியில் மட்டுமே இதுவரை அவர் களமிறங்கி உள்ளார்.
இதனிடையே, டெவான் கான்வேவின் திருமண நிகழ்ச்சி ஒன்றில், சென்னை வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அதுவும், வேட்டி, சட்டை உடையில் தோனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
தமிழ் கலாச்சாரப்படி..
கிம் வாட்சன் என்ற பெண்ணை காதலித்து வருகிறார் கான்வே. இவர்கள் இருவருக்கும், கடந்த 2020 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. தொடர்ந்து, விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கின்றனர். அப்படி ஒரு நிலையில் தான், கிம் வாட்சனும் தற்போது கான்வேவை காண மும்பை வந்துள்ளதால், Pre Wedding நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் கலாசார முறைப்படி, வேட்டி சட்டையை டெவான் கான்வே அணிந்திருக்க, கிம் வாட்சன் மஞ்சள் நிற புடவை ஒன்றை அணிந்திருந்தார். அதே போல, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிஎஸ்கே வீரர்கள் அனைவரும், வேட்டி அணிந்து கொண்டு கலந்து கொண்டனர். சென்னை அணியின் இந்த நிகழ்ச்சி பற்றி நெகிழ்ந்து போன டெவான் கான்வே, சிஎஸ்கேவிற்கு நன்றி தெரிவித்து, நெகிழ்ச்சியுடன் சில புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
ஒரு அணி என்பதைத் தாண்டி, ஒரு குடும்பமாக தான் எப்போதும் சிஎஸ்கே இருக்கும் என ஒரு கூற்றுண்டு. அதனை மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கும் வகையில் நடந்த இந்த சம்பவம், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.