“அஸ்வின், சஹால் ஓவரை அவர் நல்லா அடிப்பார்”.. ஸ்கெட்ச் போட்டு விளையாடியும் மிஸ்ஸான வெற்றி.. KKR கோச் ஆதங்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெங்கடேஷ் ஐயரை மிடில் ஆர்டரில் களமிறக்கியதற்கான காரணத்தை கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 30-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 103 ரன்கள் அடித்தார்.
இதனை அடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது. கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 85 ரன்களும், ஆரோன் பின்ச் 58 ரன்களும் எடுத்தனர்.
இந்த போட்டியில் கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் நெருங்கி, கடைசியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது. வழக்கமாக கொல்கத்தா அணியில் தொடக்க வீரராக களமிறங்கி வரும் வெங்கடேஷ் ஐயர், இப்போட்டியில் 6-வது வீரராக களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
இந்த நிலையில் இதுகுறித்து கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘இந்த போட்டியில் இலக்கு மிகப்பெரியது என்பதனால் ஆரம்பத்திலேயே அதிரடி ஆட்டம் தேவைப்பட்டது. அதனால்தான் ஆரோன் பின்ச் உடன் நாங்கள் சுனில் நரைனை தொடக்க வீரராக களமிறக்கினோம். சுனில் நரைன், தொடக்க வீரராக களமிறங்கி எப்படிப்பட்ட அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என்பதை நாம் பலமுறை பார்த்துள்ளோம். ஆனால் எதிர்பாராத விதமாக ஆரம்பத்திலேயே அவர் ரன் அவுட் ஆனது எங்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
வெங்கடேஷை பின்வரிசையில் களமிறக்கினால் அஸ்வின் மற்றும் சஹால் ஆகியோரது பந்துவீச்சை சமாளித்து அவரால் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும். அதனால்தான் மிடில் ஆர்டரில் அவரை களமிறக்கினோம். கிட்டத்தட்ட 15 ஓவர்கள் வரை போட்டி எங்கள் வசம்தான் இருந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகள் காரணமாக வெற்றி வாய்ப்பு பறிபோனது வருத்தமாக உள்ளது’ என மெக்கல்லம் கூறியுள்ளார்.
இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரேன், ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதேபோல் 6-வது வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 6 ரன்னில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | “அப்பவே சொன்னேன்.. இப்படி ஏதாவது நடக்கும்னு”.. ஹர்திக் பாண்ட்வை முன்னாடியே எச்சரித்த பாகிஸ்தான் வீரர்..!