"தோனிக்காக கண்டிப்பா அத செய்வேன்.." ரெய்னா எடுத்த முடிவு.. "இதுக்கு எல்லாம் ஒரு மனசு வேணும்யா.." மீண்டும் வருந்திய ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள், பெங்களூரில் வைத்து, ஐபிஎல் மெகா ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
இதில், அனைத்து அணிகளும் தாங்கள் திட்டம் போட்ட படியே பல வீரர்களை தங்களது அணியில், எதிர்பார்த்த தொகைக்கு எடுத்தது.
இன்னும் சில அணிகள், எதிரணியின் தொகையை வேண்டுமென்றே ஏற்றி விட்டு வேடிக்கை பார்த்த நிகழ்வுகளும் அதிகம் அரங்கேறியிருந்தது.
சிஎஸ்கே வீரர்கள்
இப்படி இரண்டு நாட்களும், ஐபிஎல் ஏலம், அதிக சுவாரஸ்யத்துடன் நடந்து முடிந்தது. ஆனால், ஐபிஎல் ஏலத்தின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்த சில முடிவுகள், ரசிகர்கள் மத்தியில் அதிகம் கேள்வியை எழுப்பியிருந்தது. பிராவோ, உத்தப்பா, ராயுடு உள்ளிட்ட சீனியர் வீரர்கள், கடந்த ஐபிஎல் சீசனில், சிஎஸ்கே அணிக்காக ஆடியிருந்தனர்.
சின்ன தல
அவர்கள் அனைவரையும், தற்போது நடைபெற்ற ஏலத்தில், மீண்டும் சென்னை அணி போட்டி போட்டு எடுத்தது. ஆனால், மற்ற நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் டு பிளஸ்ஸிஸ் ஆகியோரை, சென்னை அணி ஏலத்தில் எடுக்காமல் விட்டு விட்டது. இதில், டு பிளஸ்ஸிஸை கூட, பெங்களூர் அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துக் கொண்டது. ஆனால், ரெய்னாவை எடுக்க, எந்த அணிகளும் முன் வரவில்லை.
ரசிகர்கள் விமர்சனம்
Mr.IPL என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடருக்காக தேர்வாகாமல் போனது, ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை அணிக்காக, சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல், தனது பங்களிப்பை அளித்த 'சின்ன தல' ரெய்னாவை, அந்த அணியும் எடுக்க முடியாமல் போனதையும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தோனி பற்றி பேசிய ரெய்னா
தொடர்ந்து, ரெய்னாவை எடுக்காமல் போனதற்கான விளக்கத்தையும், சிஎஸ்கே அணி அளித்திருந்தது. இருந்த போதிலும், ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டிகளில், களமிறங்காமல் போனது பற்றி, தொடர்ந்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது, சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்து, ரெய்னா பேசிய வீடியோ ஒன்றை, தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
சாம்பியன் சிஎஸ்கே
கடந்த ஐபிஎல் சீசனில், சென்னை அணி தான் கோப்பையைக் கைப்பற்றியிருந்தது. தொடர்ந்து, இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில், தோனி களமிறங்குவாரா என அதிகம் கேள்விகள் இருந்தது. வயதின் காரணமாக, ஐபிஎல் தொடரில் இருந்து தோனி விலகுவார் என்றும் கருத்துகள் நிலவி வந்தது. ஆனால், இறுதியில், சிஎஸ்கே அணி தோனியைத் தக்க வைத்து, 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் களமிறங்குவார் என்பதை உறுதி செய்தது.
முயற்சி செய்வேன்
இதனிடையே, கடந்த ஐபிஎல் தொடரின் போது, சுரேஷ் ரெய்னா Interview ஒன்றை அளித்திருந்தார். அதில் பேசும் ரெய்னா, அடுத்த சீசனில் (2022), தோனி ஐபிஎல் தொடரில் ஆடவில்லை என்றால், நானும் நிச்சயம் இடம்பெற மாட்டேன் என்றும், 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை நாங்கள் கைப்பற்றினால், என்னால் முடிந்த வரை, தோனியை 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட சம்மதிக்க வைப்பேன் என்றும் ரெய்னா குறிப்பிட்டிருந்தார்.
ரெய்னாவுக்கு இடமில்லை
அவர் கூறியது போலவே, சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு கோப்பையைத் தட்டிச் சென்றிருந்தது. அதே போல, தோனியும், இந்தாண்டு ஐபிஎல் சீசனில் களமிறங்க போகிறார். ஆனால், தோனி ஆடவில்லை என்றால், நானும் களமிறங்க மாட்டேன் என கூறிய ரெய்னாவிற்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனைக் குறிப்பிட்டு, ரசிகர்கள் மேலும் ரெய்னாவிற்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு, சர்வதேச போட்டியில் இருந்து தோனி ஓய்வினை அறிவித்த அதே நாளில், ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.