தீபாவளியை IND VS PAK மேட்சுடன் கழிக்கும் சுந்தர் பிச்சை.. ரசிகரின் கமெண்ட்க்கு ஜாலி பதிலடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி குறித்து தற்போது வரை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி அன்று சூப்பர் 12 சுற்று ஆரம்பமாகி இருந்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களின் முதல் போட்டியில் பாகிஸ்தான அணியை சந்தித்து இருந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித், பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தார். அதன்படி ஆடிய பாகிஸ்தானின் தொடக்க வீரர்களான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோரின் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் எடுத்து அசத்தி இருந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறினாலும் இப்திகர் மற்றும் மசூத் ஆகியோர் அரை சதம் அடித்து ஓரளவுக்கு அணியின் ஸ்கோரை நிலை நிறுத்தி இருந்தனர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியும் ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, ஓரளவு தடுமாற்றம் கண்டது. பின்னர் ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி, பட்டையைக் கிளப்பி இருந்தது. குறிப்பாக விராட் கோலியும் கடைசிவரை பக்கபலமாக இருந்து அணியை வெற்றி பாதைக்கு எடுத்துச் சென்றார். தீபாவளி சூழலில் இந்திய அணி வெற்றியுடன் டி20 உலகக்கோப்பை தொடரை தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இந்த தீபாவளியை இந்த காரணத்துக்காகவே தற்போது வரை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து சுந்தர் பிச்சை போட்ட ட்வீட்டும், அதற்கு ரசிகர்கள் கேட்ட விஷயத்திற்கு திருப்பி அளித்த பதிலும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் பிறந்த இந்தியரான கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சென்னையில் படித்தது, நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாண்டது என பலவற்றையும் குறித்து பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சுந்தர் பிச்சை, தமது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு, கடைசி மூன்று ஓவர்களை மீண்டும் பார்த்து தனது தீபாவளியை கொண்டாட இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் கடைசி மூன்று ஓவர்களில் விராட் கோலி உதவியுடன் இந்திய அணி வெற்றி பெற்றதை குறிப்பிட்டுதான் சுந்தர் பிச்சை அப்படி ட்வீட் செய்திருந்தார்.
அப்போது ரசிகர் ஒருவர், முதல் மூன்று ஓவர்களை நீங்கள் பார்க்க வேண்டும் என்று இந்திய அணி விக்கெட்டுகள் விழுந்த முதல் மூன்று ஓவர்களை குறிப்பிட்டு இருந்தார். இதனை கவனித்த சுந்தர் பிச்சை அந்த ரசிகருக்கு கொடுத்த தரமான பதிலடி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாக மாறி உள்ளது. அதாவது அந்த ரசிகர் இந்திய அணி விக்கெடுகள் இழந்த முதல் மூன்று ஓவர்களை குறிப்பிட, சுந்தர் பிச்சையோ பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்த முதல் மூன்று ஓவர்களை குறிப்பிட்டு, "அதையும் நான் பார்த்தேன். அர்ஷ்தீப் சிங் மற்றும் புவி ஆகியோர் அருமையாக செயல்பட்டனர்" என பாகிஸ்தான் அணியின் முதல் மூன்று ஓவர் பேட்டிங்கில் இந்திய பௌலர்களின் சிறப்பான பந்துவீச்சை குறிப்பிட்டு பதில் கொடுத்துள்ளார்.