தோத்தா கூட இப்படியொரு ‘வார்த்தை’ சொல்ல மனசு வேணும்.. கேன் வில்லியம்சனை கொண்டாடும் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் உருக்கமாக பேசியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்தும் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் நியூஸிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்தில் மற்றும் டேரில் மிட்செல் களமிறங்கினர். இந்த கூட்டணி ஆரம்பத்தில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அப்போது ஜோஸ் ஹசில்வுட் வீசிய 4-வது ஓவரில் டேரில் மிட்செல் (11 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஆடம் ஜாம்பா வீசிய 12-வது ஓவரில் மார்டின் கப்திலும் (28 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதனால் 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் மட்டுமே நியூஸிலாந்து அணி எடுத்திருந்தது.
இந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் (85 ரன்கள்) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை நியூஸிலாந்து அணி எடுத்தது. ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை ஜோஸ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளும், ஆடம் ஜாம்பா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி தட்டிச்சென்றது. இதில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஸ் 77 ரன்களும், டேவிட் வார்னர் 53 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில், போட்டி முடிந்த பின் தோல்வி குறித்து பேசிய நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (Kane Williamson), ‘எங்களுக்கு அருமையான பேட்டிங் பார்ட்னர்ஷிப் அமைந்தது. அதனால் நல்ல டார்கெட்டை நிர்ணயித்தோம். ஆனால் இப்படியொரு சேசிங் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியை பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்’ என தோல்வியடைந்த சோகத்திலும் ஆஸ்திரேலிய அணியை பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்த இடத்தில் இருந்து நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்று கணிக்கவே முடியாது. நாங்கள் எங்களால் முடிந்த உழைப்பைக் கொடுத்தோம். போட்டியையும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தோம். ஆனாலும் இதை ஆஸ்திரேலிய அணி சேசிங் செய்துள்ளது. அவர்கள் எந்த இடத்திலும் எங்களுக்கு சிறிய இடம் கூட கொடுக்கவில்லை. இதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். இன்றைக்கு எங்களுக்கான நாள் இல்லை, அவ்வளவுதான்.
ஆனால் இந்த தொடரில் சிறப்பாகவே விளையாடியிருக்கிறோம். இங்கு 3 மைதானங்களில் மாறிமாறி விளையாடினோம். அதனால் ஒவ்வொரு மைதானத்துக்கும் எப்படி விளையாட வேண்டும் என்று திட்டம் போட்டு செயல்பட்டோம். அதை செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளோம். அதை நினைக்கும் எங்களுக்கு பெருமையாக உள்ளது. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அற்புதமாக விளையாடினர். அதேபோல் உலகம் முழுவதும் இருந்து எங்களுக்கு ஆதரவு கிடைத்தது நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த தொடரில் விளையாட வந்தபோது எப்படியாவது கோப்பையை வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. அது முடியாமல் போனதை நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாகவே உள்ளது. ஒரு போட்டி என்று வந்தால் ஒன்று வெற்றி, இல்லை தோல்விதான் இருக்கும். இதில் நாங்கள் தோல்வியின் பக்கம் இருக்கிறோம் என்பதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது’ என கூறிவிட்டு சோகமாக கேன் வில்லியம்சன் சென்றார்.