‘I'M BACK’!.. எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது உறுதி.. ரசிகர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த இளம் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாயத்தில் இருந்து மீண்டு விட்டதால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனுமான ஸ்ரேயாஸ் ஐயருக்கு, இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த தொடரின் பாதியிலேயே அவர் வெளியேறினார். இதனை அடுத்து காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், சில மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதன்காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் டெல்லி அணியை கேப்டனாக வழி நடத்தி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் தலைமையில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, 6-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
இதனிடையே நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய சில கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என தெரிகிறது.
இந்த நிலையில் காயத்தில் இருந்து மீண்ட ஸ்ரேயாஸ் ஐயர் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த அவர், ‘என் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடைந்துவிட்டது. இன்னும் ஒரு மாதத்தில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தயாராகிவிடுவேன். அதனால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன்’ என ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கேப்டன் பொறுப்பு குறித்து பேசிய அவர், ‘கேப்டன் பதவி கிடைக்குமா என்பது அணி உரிமையாளர் கையில்தான் உள்ளது. நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை. ஏனென்றால் டெல்லி அணி தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை டெல்லி அணி கோப்பையை கைப்பற்றவில்லை. நிச்சயம் இந்தமுறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு’ என ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் தலைமையிலான டெல்லி அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
