கோலி மட்டும் இதை ‘மிஸ்’ பண்ணிட்டா.. ரோஹித் ‘கேப்டன்’ ஆவதை யாராலும் தடுக்க முடியாது.. முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமிப்பது குறித்து முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியின்போது அடிக்கடி மழை குறுக்கிட்டதால், 2 நாட்கள் ஆட்டம் கைவிடப்பட்டது. இதன்காரணமாக போட்டி டிரா ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நாளான ரிசர்வ்டே ஆட்டத்தில் இந்திய அணியின் சொதப்பலான ஆட்டத்தில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதனால் ஐசிசி முதல்முறையாக நடத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா தவறவிட்டது.
அதேபோல் 2017-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை ஆகிய தொடர்களிலும் இந்தியா தோல்வியையே தழுவியது. இப்படி ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கேப்டன் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் அடுத்து நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்தால், நிச்சயம் கேப்டன் பொறுப்பில் மாற்றம் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா, ‘இந்திய அணிக்கு தற்போது புதிய கேப்டனை நியமிப்பது சரியாக இருக்காது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. புதிய கேப்டனை நியமிக்கும் போது வீரர்கள் அவரது தலைமையில் விளையாட சற்று நேரம் எடுக்கும். அதனால் விராட் கோலியே டி20 உலகக்கோப்பைக்கு கேப்டனாக செயல்பட வேண்டும்.
ஒருவேளை இந்த தொடரிலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவினால், ரோஹித் ஷர்மா டி20 அணிக்கு கேப்டன் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. கோலிக்கு அடுத்தபடியாக இந்திய அணியை வழி நடத்தும் திறமை இவருக்குதான் இருக்கிறது’ என தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.