ICC: அப்படி போடு! இலங்கைக்கு எதிரான தொடர்.. கலக்கிய இளம் இந்திய வீரர்… ஐசிசி அளித்த கௌரவம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருதைப் பெற்றுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர்
ஐபிஎல் கண்டுபிடிப்புகளில் ஒருவரான ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு யுவ்ராஜ் சிங்குக்கு பிறகு சிறந்த பின்வரிசை வீரராக உருவாகி வருகிறார். இந்திய அணியில் இடம்பிடித்த அவர் கடந்த சில மாதங்கள் காயம் காரணமாக அணிக்குள் தொடர்ந்து இருக்க முடியாத சூழலுக்கு ஆளானார். இதையடுத்து அணிக்கு திரும்பியுள்ள அவர் இப்போது சிறப்பான பார்மில் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வந்த அவர் இப்போது கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி 20 போட்டிகளில் அபாரம்
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஐ.சி.சி டி20 தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 18-வது இடத்தை பிடித்து முன்னேற்றம் கண்டிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக விளையாடியதை அடுத்து அவர் டி 20 தொடருக்கான தரவரிசை பட்டியலில் பரமபத ஏணி போல பல புள்ளிகள் முன்னேற்றம் கண்டார்.
இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டியிலும் அதிரடியாக அரை சதம் அடித்த அவர் மேட்ச் வின்னராகவும் ஜொலித்தார். இந்த போட்டியில் மட்டும் மொத்தம் 204 ரன்கள் விளாசி தள்ளினார் ஸ்ரேயாஸ் ஐயர். இதன் காரணமாக ஐசிசி டி 20 புள்ளிப்பட்டியலில் 27 இடங்கள் முன்னேறி, 18-வது இடத்தை பிடித்து அசத்தி இருந்தார்.
டெஸ்ட் போட்டியிலும் சிறப்பு
இதையடுத்து இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இதிலும் ஸ்ரேயாஸ் ஐயர் பின் வரிசை வீரராக இறங்கிக் கலக்கி வருகிறார். இரண்டாவது டெஸ்ட்டின் இரு போட்டிகளிலும் அரைசதம் அடித்துக் கலக்கியுள்ளார். இதையடுத்து இப்போது அவருக்கு மிகப்பெரிய கௌரவம் ஒன்றை ஐசிசி அளித்துள்ளது.
தற்போது அவரின் சிறப்பான பங்களிப்பை அடுத்து ஐசிசி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த பிளேயராக அவரை அறிவித்துள்ளது. இந்த விருதைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஆவார். ஏற்கனவே ரிஷப் பண்ட் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் புதிய முன்னெடுப்பு
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளின் மேல் ரசிகர்களின் ஆர்வம் அதிகமாகும் பொருட்டு இந்த ப்ளேயர் ஆஃப் த மந்த் உள்ளிட்ட பல அறிவிப்புகளை அறிவித்தது. இதையடுத்து ஒவ்வொரு மாதம் தோறும் நடக்கும் போட்டிகளின் அடிப்படையில் வீரர்களின் பங்களிப்பை அடுத்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.