“கனத்த இதயத்துடன் இதை சொல்றேன்”.. இந்த முடிவை எடுக்க காரணம் இதுதான்.. கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் திடீர் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேரள அணிக்காக விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்ரீசாந்த் இடம் பெற்றிருந்தார். அப்போது ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாகக்க கூறி, ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாட பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்து. இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இல்லை எனக் கூறி விடுவித்தது.
இதனை அடுத்து பிசிசிஐ அவருக்கு விதித்த தண்டனையை குறைத்தது. இதனைத் தொடர்ந்து ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் கேரள அணிக்காக விளையாடி வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் தனது பெயரை ஸ்ரீசாந்த் பதிவு செய்திருந்தார். ஆனால் எந்த அணியும் அவரை ஏலம் எடுக்க முன்வரவில்லை.
இந்த நிலையில், முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்ரீசாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீசாந்த் தனது ட்விட்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘மிகுந்த சோகத்தோடு கனத்த இதயத்துடன் இதைச் சொல்கிறேன். முதல் தர கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். அடுத்த தலைமுறை வீரர்களுக்காக, எனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை இத்தோடு முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு என்னுடைய தனிப்பட்ட முடிவு. இது எனக்கு மகிழ்ச்சியைத் தராது என்று எனக்குத் தெரிந்தாலும், இந்த நேரத்தில் எடுப்பது சரியான மற்றும் மரியாதைக்குரிய நடவடிக்கையாக நினைக்கிறேன். முதல் தர கிரிக்கெட்டில் இருந்த ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் ஸ்ரீசாந்த் விளையாடியுள்ளார். மேலும் 74 முதல் தர போட்டி, 92 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ரஞ்சிக் கோப்பையில் கேரள அணிக்காக மெகாலயா அணிக்கு எதிராக விளையாடி இருந்தார். அப்போட்டியில் 2 விக்கெட்டுகளை ஸ்ரீசாந்த் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
