‘அவங்க நான் சொல்றத கேட்கவே மாட்டாங்க’!.. சீனியர் வீரர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு.. அதிர வைத்த மும்பை அணியின் ஃபீல்டிங் கோச்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணியில் சில சீனியர் வீரர்கள் தனது பேச்சைக் கேட்பதில்லை என ஃபீல்டிங் பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இந்தியாவில் நடந்து வந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில், கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். அந்த வகையில் மும்பை அணியில் விளையாடிய நியூஸிலாந்து அணியின் வீரர்களான டிரென்ட் போல்ட், மாட் ஹென்றி, ஜிம்மி நீஷம் மற்றும் அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பான்ட், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பம்மண்ட் ஆகியோர் விமானம் மூலம் நியூஸிலாந்து சென்றடைந்தனர்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பம்மண்ட், அந்த அணியின் சீனியர் வீரர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுகுறித்து stuff.co.nz சேனலில் பேசிய அவர், ‘இந்திய அணியின் சில சீனியர் வீரர்கள் ஐபிஎல் தொடரின்போது விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க தயக்கம் காட்டினர். அவர்களின் உடல்மொழிகளும் வித்தியாசமாகவே இருந்தது. ஒரு விஷயத்தை நான் செய்யக்கூடாது எனக் கூறினால், உடனே முகத்தை சுளித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு சென்றுவிடுவார்கள். சீனியர் வீரர்களை, இதைச் செய்யுங்கள் அதைச் செய்யுங்கள் என கூற முடியாது, அவர்களே புரிந்து நடக்க வேண்டும்’ என பேசியுள்ளார். ஆனால் அந்த சீனியர் வீரர்கள் யார்? என்பதை அவர் கூறவில்லை.
தொடர்ந்து பேசிய ஜேம்ஸ் பம்மண்ட், ‘ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது கூட, வீரர்கள் வீடு திரும்பாமல் தொடர்ந்து விளையாடுவோம் என கூறினர். இந்த விஷயம் என் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது’ என அவர் கூறினார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெற்றோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அப்போது தோனி வீடு திரும்பவில்லை. தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார். தற்போது தோனியின் பெற்றோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டு வீரர்கள் அனைவரும் வீடு திரும்பினர். அந்த சமயம் சிஎஸ்கே அணியின் அனைத்து வீரர்களையும் பத்திரமாக அனுப்பி வைத்தவிட்டு, கடைசியாகதான் தோனி வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.