என் முழு கவனமும் ஐபிஎல் மேலதான் இருக்கு.. டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காததை நினைச்சு வருத்தப்படல.. இளம் வீரர் ஓபன் டாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து சஞ்சு சாம்சன் முதல் முறையாக பகிர்ந்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. இதில் வருண் சக்கரவத்தி, ராகுல் சஹார், இஷான் கிஷன், அக்சர் படேல் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நீண்ட வருடங்களாக லிமிடெட் ஓவருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த அஸ்வினுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர்களாக நடராஜன், வாசிங்டன் சுந்தர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. இவர்கள் இருவரும் காயம் காரணமாக ஓய்வில் இருந்ததால், அணியில் இடம்பெறவில்லை என தேர்வுக்குழு தலைவர் விளக்கமளித்தார். அதேபோல் சஞ்சு சாம்சனும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. சமீபத்தில் நடந்த இலங்கை தொடரில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால்தான் சஞ்சு சாம்னுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். அதில், ‘தற்போது என்னுடைய முழு கவனமும் ஐபிஎல் மீது தான் உள்ளது. இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து அதிகமாக யோசித்து குழப்பிக்கொள்ள மாட்டேன். இதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட முடியாது.
ஐபிஎல் போட்டியை உலகளவில் மக்கள் பார்க்கின்றனர். இந்த தொடரில் நமது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினால், மக்கள் நம்மை பாராட்டுவார்கள். அதேபோல் சொதப்பினால் திட்டவும் செய்வார்கள். தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், இந்திய அணியில் தானாக இடம் கிடைக்கப் போகிறது. அதனால் என்னுடைய ஆட்டத்தில் மட்டும்தான் நான் கவனம் செலுத்த உள்ளேன்’ என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கேப்டனாக இருந்து சஞ்சு சாம்சன் வழி நடத்தி வருகிறார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி, 3-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் இருந்து வருகிறது.