ஐபிஎல் ஆரம்பிக்க இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.. அதுக்குள்ள என்ன நடந்தது..? திடீரென விலகிய 3 முக்கிய வீரர்கள்.. கலக்கத்தில் 3 அணிகள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக மூன்று வீரர்கள் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட தொடரில் 29 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. அதனால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.
அதன்படி வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் போட்டிகள் தொடங்க உள்ளன. இதன் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இதனிடையே இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற இருந்த இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர் மற்றும் பிசியோ உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் போட்டி ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் ஐபிஎல் தொடரை மனதில் வைத்து தான் இப்போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன், கிறிஸ் வோக்ஸ் ஆகிய மூன்று வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். தற்போது ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் வீரர்கள் கட்டாயம் 6 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். அப்போது எடுக்கப்படும் கொரோனா பரிசோனையில் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே பயோ பபுளில் இணைய முடியும். இதன் காரணமாக இங்கிலாந்து வீரர்கள் விலகி இருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதில் ஜானி பேர்ஸ்டோ சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும், டேவிட் மாலன் பஞ்சாப் கிங்ஸ் அணியிலும், கிறிஸ் வோக்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் விளையாடி வருகின்றனர். ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், திடீரென இங்கிலாந்து வீரர்கள் விலகியிருப்பது, மூன்று அணிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அணியில் சேர்க்க தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.