மனுசன் எவ்ளோ நொந்துபோய் இருந்தா இப்படி சொல்லிருப்பாரு.. ‘பரபரப்பை கிளப்பிய குல்தீப்’.. என்ன முடிவு எடுக்கப்போகிறது KKR..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாட இடம் கிடைக்காதது குறித்து சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் (IPL 2021) தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக்கத்தில் (UAE) நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே ஒவ்வொரு அணி வீரர்களும் அமீரகம் வந்த வண்ணம் உள்ளனர்.
இதன் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும் மோதுகின்றன. இதற்கான ஒரு மாதத்திற்கு முன்பே ஐக்கிய அரபு அமீரகம் சென்ற சிஎஸ்கே வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2-ம் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav), அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதது குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், ‘கொல்கத்தா அணியின் பயிற்சியாளார் என்னுடன் பேசி இருந்தால் எனது ஆட்டம் குறித்து தெரிந்திருக்கும். ஆனால் இங்கு அதில்தான் மிகப்பெரிய இடைவெளியே உள்ளது. சில நேரங்களில், நான் அணியில் இடம்பெறுகிறேனா, இல்லையா என்பதே எனக்கு தெரியாது.
அணி நிர்வாகம் என்னிடம் என்னதான் எதிர்பார்க்கிறது என தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறேன். ஒரு சில போட்டிகளில் நான் விளையாடி இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாமோ என்று கூட தோன்றும், ஆனால் விளையாட ஏன் வாய்ப்பு தரவில்லை என்று எனக்கு தெரியாது. இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றால், அதற்கான காரணத்தை அணி நிர்வாகம் உடனே தெரிவிக்கும். ஆனால் ஐபிஎல் தொடரில் அப்படி இல்லை.
ஒருவேளை கொல்கத்தா அணிக்கு இந்திய வீரர் ஒருவர் கேப்டனாக இருந்திருந்தால், இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். உதராணமாக ரோஹித் ஷர்மா கேப்டானாக இருந்தால், நான் நேரடியாகவே அவரிடம் சென்று ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என சுதந்திரமாக என்னால் கேட்க முடியும். ஆனால் இயான் மோர்கன் என்னிடம் பேசுவது கூட கிடையாது’ என குல்தீப் யாதவ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக கவுதம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்தபோது, அந்த அணிக்கு குல்தீப் யாதவ் நட்சத்திர ஆட்டக்காரராக இருந்து வந்தார். அவர் ஓய்வு பெற்றதும், குல்தீப் யாதவுக்கு அணியில் சரிவர வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. கடந்த ஐபிஎல் தொடரில் ஒரு சில போட்டிகளில் விளையாடினார்.
ஆனால் நடப்பு தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட குல்தீப் யாதவ் விளையாடவில்லை. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அணி நிர்வாகம் மீதும், கேப்டன் மீதும் குல்தீப் யாதவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தது, கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.