‘அவரை எங்களுக்கே கொடுத்திருங்க’!.. சிஎஸ்கே வீரரை கேட்கும் ராஜஸ்தான்.. மாற வாய்ப்பு இருக்கா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவரை டிரான்ஸ்பர் முறையில் பெற ராஜஸ்தான் ராயல்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 22 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்று (28.04.2021) நடைபெற உள்ள 23-வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியுடன் சென்னை அணி மோதுகிறது.
இதனிடையே சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பாவை டிரான்ஸ்பர் முறையில் பெற ராஜஸ்தான் அணி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணியில் ராபின் உத்தப்பா விளையாடி வந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு நடந்த மினி ஐபிஎல்-க்கு முன்னதாக ராஜஸ்தான் அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதனால் அப்போது டிரான்ஸ்பர் முறையில் ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணி எடுத்தது.
ஆனால் இதுவரை ராபின் உத்தப்பாவை ஒரு போட்டியில் கூட சென்னை அணி விளையாட வைக்கவில்லை. அதற்கு காரணம் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளசிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய ருதுராஜ் கெய்க்வாட், அடுத்தடுத்த போட்டிகளில் ஃபார்மிற்கு திரும்பி அதிரடி காட்ட ஆரம்பித்துள்ளார்.
இதனால்தான் தொடக்க ஆட்டக்காரரான ராபின் உத்தப்பாவுக்கு சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. தற்போது வீரர்களை மாற்றிக்கொள்ளும் டிரான்ஸ்பர் விண்டோ திறக்கப்பட்டுள்ளது. அதனால் ராஜஸ்தான் அணி மீண்டும் ராபின் உத்தப்பாவை தங்கள் அணியில் இணைக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக ராஜஸ்தான் அணியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ், ஆண்ட்ரூ டை மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் போன்ற வெளிநாட்டு வீரர்கள் தொடரில் இருந்து பாதியிலேயே விலகினர். இதன் காரணமாகவே டிரான்ஸ்பர் முறையில் வீரர்களை எடுக்க ராஜஸ்தான் அணி தீவிர காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.