‘என்னப்பா இப்டி பண்ணிட்ட’!.. ‘மிஸ்ஸான முக்கிய விக்கெட்’.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Nov 04, 2019 07:01 PM

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை கிண்டல் செய்யும் விதமாக ரோஹித் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rohit Sharma reacts on Rishabh Pant wrong DRS calls

இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று (03.11.2019) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனால் ரோஹித் ஷர்மா கேப்டனாக அணியை வழி நடத்தினார். டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் ரோஹித் ஷர்மா 9 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 15 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களும், ரிஷப் பந்த் 27 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 41 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணி 19.3 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணியின் பல சொதப்பல்களால் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரகுமான் 6 ரன்னில் இருந்தபோது சஹால் வீசிய ஓவரில் எல்பிடபில்யூ ஆனது. ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. அப்போது கேப்டன் ரோஹித் ஷர்மாவும் ரிவியூ (DRS) கேட்கவில்லை. பின்னர் டிவியில் ரீப்ளே காட்டப்பட்டபோது அது அவுட் என தெரிந்தது. இதனை விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சரியாக கணித்து தெரிவிக்கவில்லை. இதனால் முஷ்பிகுர் ரகுமான் 60 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனை அடுத்து சவும்யா சர்கார் பேட்டிங் செய்தபோது சஹால் வீசிய 10-வது ஓவரின் கடைசி பந்து பேட்டில் பட்டு வந்ததாக நினைத்து ரிஷப் பந்த் கேட்ச் பிடித்து, அதனை ரிவியூ கேட்க சொன்னார். ரோஹித் ஷர்மா நம்பிக்கை இல்லாமல் ரிவியூ கேட்க அது நாட் அவுட்டானது. இதனால் தேவையில்லாமல் ஒரு ரிவியூ இழக்க நேரிட்டது. அப்போது ‘என்னப்பா இப்டி பண்ணிட்ட’ என்பது போல ரிஷப் பந்தைப் பார்த்து ரோஹித் ஷர்மா சிரித்துக்கொண்டே கேட்ட வீடியோ சமூக வலைளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #CRICKET #RISHABHPANT #BCCI #ROHITSHARMA #DRS #VIRALVIDEO #INDVBAN #T20