"என்ன பண்ணிட்டு இருக்கே".. மீண்டும் ஒருமுறை கடுப்பான ரோஹித் ஷர்மா.. "இந்த தடவ சிக்குனது யாரு தெரியுமா?"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி, இன்று நடைபெற்றிருந்த நிலையில், இந்த போட்டியிலும் இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று, ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியிருந்த நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றிருந்து.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 265 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
வொயிட் வாஷ்
இறுதியில், 38 ஆவது ஓவரில், 169 ரன்கள் மட்டுமே எடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டானது. இதன் மூலம், 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 - 0 என தொடரைக் கைப்பற்றி, வெஸ்ட் இண்டீஸ் அணியை வொயிட் வாஷ் செய்தது.
சிறப்பான தலைமை
இந்த மூன்று போட்டிகளிலும், இந்திய அணி பேட்டிங்கில் பல முறை தடுமாறினாலும், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் தான், இப்படி சிறப்பாக தொடரை வென்று சாதிக்க முடிந்தது. இதற்கு மிக முக்கிய காரணம், கேப்டன் ரோஹித் ஷர்மா தான். வெஸ்ட் இண்டீஸ் தொடர் மூலம், இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டரோஹித் ஷர்மா, முதல் தொடரிலேயே சிறப்பாக அணியை வழி நடத்தி, பட்டையைக் கிளப்பியுள்ளார்.
கத்திய ரோஹித் ஷர்மா
அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும், அவ்வப்போது அணி வீரர்களிடம் மிகவும் கண்டிப்பான முறையிலும் ரோஹித் ஷர்மா நடந்து கொள்கிறார். இரண்டாவது ஒரு நாள் போட்டியில், சாஹல் மற்றும் ஷர்துல் ஆகியோடம், ரோஹித் கத்திப் பேசும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகம் வைரலாகி இருந்தது.
கோபப்பட்ட ரோஹித்
அதே போல, மூன்றாவது போட்டியிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நீண்ட நாளுக்கு பிறகு, ஒரு நாள் அணியில் இடம் பிடித்திருந்தார் குல்தீப் யாதவ். 8 ஓவர்கள் பந்து வீசிய அவர், 51 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இந்நிலையில், குல்தீப் பந்து வீசிய பிறகு தான், ரோஹித் கோபத்தில் ஒரு வார்த்தையை பேசியிருந்தார்.
குல்தீப் - ரோஹித்
சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், ஒரு பந்தினை சற்று வேகமாக வீசினார். இதனைக் கவனித்த ரோஹித் ஷர்மா, 'இவ்வளவு வேகமாக வீச நீ ஒன்றும் வேகப்பந்து வீச்சாளர் இல்லை. Wrist ஸ்பின்னர் போல பந்து வீசு' என ரோஹித் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான ஆடியோ, மைக்கில் பதிவாகியுள்ளது.
இணையத்தில் வைரல்
ஒரு அணியின் கேப்டன் தான், தன்னுடைய பந்து வீச்சாளரிடம் இருந்து சிறந்த ஒரு பந்து வீச்சைக் கொண்டு வர முடியும். அதற்காக, சில நேரங்களில் கண்டிப்பாக கூட கேப்டன் நடந்து கொள்வதுண்டு. இருந்த போதிலும், ரோஹித் - குல்தீப் தொடர்பான சம்பவங்கள் அதிகம் வைரலானதால், கிரிக்கெட் ரசிகர்கள் இது பற்றி அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.