"ஓஹோ, 'ரோஹித்'துக்கு இப்டி எல்லாம் கூட நடந்துருக்கா.." 'இந்திய' அணிக்குள் நடந்த 'வேடிக்கை' சம்பவம்!.. "ஆனாலும், சேட்டை புடிச்ச ஆளுய்யா இந்த 'கோலி'!!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் மிக முக்கிய வீரராக விளங்குபவர் ரோஹித் ஷர்மா (Rohit Sharma). எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டிகள் ஆனாலும், ரோஹித் இல்லாத இந்திய அணியை நிச்சயம் யோசித்துக் கூட பார்க்க இயலாது.

அந்த அளவுக்கு இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ரோஹித் ஷர்மா, தொடக்கத்தில் சற்று நிதானமாக தனது பேட்டிங்கை தொடங்குவார். அதன் பிறகு நிலைத்து விட்டால், எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுவார். எப்படிப்பட்ட பவுலராக இருந்தாலும், தனது அதிரடியால், மிரள வைக்கக் கூடிய ரோஹித் ஷர்மாவிற்கு, மிகப் பெரிய பிரச்சனை ஒன்றும் உள்ளது.
ஆம், நியாபக மறதி தான் ரோஹித்தின் மிகப்பெரிய பிரச்சனை. இது, அதிகம் பேருக்கு தெரியாது. உதாரணத்திற்கு, கிரிக்கெட் சுற்றுப்பயணம் முடிந்து, ஹோட்டலில் இருந்து திரும்பும் போது, கடிகாரம், மொபைல் போன், பாஸ்போர்ட் உள்ளிட்ட பொருட்களைக் கூட, மறந்து விட்டு வருவார் என இந்திய கேப்டன் கோலியே ஒருமுறை சொல்லியுள்ளார். அப்படி ஒருமுறை, தனது திருமண மோதிரத்தையே ரோஹித் ஷர்மா மறந்து விட்டுச் சென்றுள்ளது வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ரோஹித் - ரித்திகா திருமணம் நடைபெற்ற நிலையில், அவர்களுக்கு சமைரா என்ற மகளும் உள்ளார். இதனிடையே, தான் திருமண மோதிரத்தை மறந்தது பற்றி, கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். அது பற்றிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இது பற்றி பேசிய ரோஹித் ஷர்மா, 'நான் எப்போதும் தாமதமாக எழுந்து, விமானத்தை பிடிப்பதை வழக்கமாக கொண்டவன். இதனால், சக வீரர்களிடம், கதவைத் தட்டி எழுப்ப சொல்லுவேன். அப்படி ஒருமுறை, அவசரமாக கிளம்பும் போது, ஹோட்டல் அறையில் எனது திருமண மோதிரத்தை மறந்து வைத்து விட்டேன்.
பின்னர், உமேஷ் யாதவின் கையிலுள்ள மோதிரத்தை நான் பார்த்த போது தான், என்னுடைய மோதிரம் பற்றி நியாபகம் வந்தது. உடனே, ஹர்பஜனிடம் இது பற்றி சொல்லி, ஹோட்டலில் உள்ளவர்களிடம் கூறி வாங்கித் தருமாறு அவரை அறிவுறுத்தினேன். மெதுவாக நான் திருமண மோதிரத்தை தொலைத்த விஷயம், இந்திய அணியிலுள்ள அனைவருக்கும் தெரிய வர, இதனைத் தெரிந்து கொண்ட கோலி (Kohli), அதனை ஒரு தலைப்புச் செய்தியை போல, முழுவதும் பரப்பிவிட்டார்' என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
மிகவும் ஜாலியாக காணப்படும் ரோஹித்திற்கு பின்னால், இப்படி ஒரு வேடிக்கை சம்பவம் நடந்துள்ளது, தற்போது தான் பலருக்கும் தெரிய வந்துள்ளது.

மற்ற செய்திகள்
