VIDEO: ‘கேப்டனே இப்படி பண்ணா எப்படி’.. கைக்கு வந்த வாய்ப்பை தவறவிட்ட கோலி.. கடுப்பான மேக்ஸ்வெல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ரன் அவுட்டை தவறவிட்டதால் மேக்ஸ்வெல் அதிருப்தியடைந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் கேன் வில்லியம்சன் (Kane Williamson) தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 44 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 31 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணியைப் பொறுத்தவரை ஹர்சல் படேல் 3 விக்கெட்டுகளும், டேனியல் கிறிஸ்டியன் 2 விக்கெட்டுகளும், சஹால் மற்றும் ஜார்ஜ் கார்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். இதில் புவனேஷ்வர் குமார் வீசிய போட்டியின் முதல் ஓவரிலேயே எல்பிடபுள்யூ ஆகி விராட் கோலி (5 ரன்கள்) வெளியேறினார்.
இதனை அடுத்து களமிறங்கிய டேனியல் கிறிஸ்டியன் 1 ரன்னிலும், கே.எஸ்.பரத் 12 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல்-தேவ்தத் படிக்கல் கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் 40 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாகி மேக்ஸ்வெல் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கலும் (41 ரன்களும்) ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே பெங்களூரு அணி எடுத்தது. அதனால் ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி ரன் அவுட் வாய்ப்பை ஒன்றை தவறவிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், போட்டியின் 16-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சஹால் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட ஹைதராபாத் விக்கெட் கீப்பர் சாஹா மிட் விக்கெட்டில் தட்டிவிட்டு சிங்கிளுக்கு ஓடினார்.
— No caption needed (@jabjabavas) October 6, 2021
ஆனால் அந்த இடத்தில் ஃபீல்டர்கள் யாரும் இல்லாததால், உடனே இரண்டாவது ரன்னுக்கு ஓடினார். இதைப் பார்த்த மேக்ஸ்வெல் பந்தை எடுத்து வேகமாக சஹாலிடம் வீசினார். ஆனால் அப்போது திடீரென ஓடி வந்த விராட் கோலி, பந்தை பிடித்து ரன் அவுட்டாக்க தவறவிட்டார். இதனால் மேக்ஸ்வெல் அதிருப்தி அடைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.