‘இதை மட்டும் செஞ்சிருந்தா ஆட்டம் எங்க பக்கம் இருந்திருக்கும்’.. எங்க தப்பு நடந்தது..? கேப்டன் தோனி கொடுத்த விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்காக காரணம் குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கம் கொடுத்துள்ளார்.

தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கும், ரிஷப் பந்த் (Rishabh Pant) தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிக்கும் இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அம்பட்டி ராயுடு 55 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி, 19.4 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 39 ரன்களும், ஹெட்மயர் 28 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் போட்டி முடிந்தபின் தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, ‘நாங்கள் 150 ரன்கள் வரை அடிக்க நினைத்தோம். ஆனால் விக்கெட்டுகள் விழுந்ததால், அதிகமாக அடிக்க முடியவில்லை. அதேவேளையில் 15-16 ஓவர்களில் விக்கெட் விழாமல் தான் இருந்தது. ஆனால் நாங்கள் அடித்த ஷாட்ஸ் தான் சரியில்லை. ஒரு 8-10 பந்துகளை மட்டும் சரியாக கணித்து அடித்திருந்தால் ஆட்டம் எங்கள் பக்கம் இருந்திருக்கும்.
அதேபோல் இந்த மைதானமும் சற்று கடினமாக இருந்தது. சில பந்துகள் அடிப்பதற்கு ஏற்ப பேட்டுக்கு வந்தது. ஆனால் சில பந்துகளில் அப்படி வரவில்லை. இப்படி இருக்கும்போது எப்படி அடித்து ஆட வேண்டும் என சரியாக சொல்ல முடியாது. இரண்டு அணியில் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால் உயரமான பவுலர்களுக்குதான் இந்த மைதானம் சாதகமாக அமைந்தது. அதேவேளையில் பவர் ப்ளே ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம்’ என தோனி கூறினார்.
பவர் ப்ளே ஓவரில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் வீசிய ஒரு ஓவரில் மட்டும் 21 ரன்கள் சென்றது. அதேபோல் ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் கிருஷ்ணப்பா கௌதம், டெல்லி அணியின் பேட்ஸ்மேன் ஹெட்மயரின் கேட்சை தவறவிட்டார். இதுதான் டெல்லி அணி வெற்றி பெற முக்கிய காரணங்களுள் ஒன்றாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
