மும்பையை தகர்த்த 'VINTAGE' தோனி.. "கடைசியில் ஜடேஜா செஞ்ச விஷயம்.. இதான்யா இன்னைக்கு 'MOMENT OF THE DAY'
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டி, விறுவிறுப்புக்கு மத்தியில், த்ரில்லாக முடிந்திருந்தது.
இரு அணிகளும் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும், இந்த இரு அணிகள் மோதுவது என்பதால், போட்டிக்கு முன்னரே வேற லெவலில் விறுவிறுப்பு இருந்தது.
டாஸ் வென்ற சிஎஸ்கே அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தது. அதன்படி, ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. திலக் வர்மா 51 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் எடுக்க, மும்பை அணி ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எட்டி இருந்தது.
முழுக்க முழுக்க விறுவிறுப்பு தான்..
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் ருத்துராஜ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதன் பிறகு, சிறிய இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, உத்தப்பா மற்றும் ராயுடு ஆகியோ ஓரளவுக்கு நல்ல ரன்களை அடித்திருந்தனர். இதனால், சிஎஸ்கே அணியும் இலக்கை நோக்கி மெல்ல மெல்ல அடி வைத்தது.
மும்பையை தகர்த்த தோனி
இருந்தாலும், கடைசி கட்டத்தில் சென்னை அணிக்கு நெருக்கடி உருவாக, கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை உனத்கட் வீச, முதல் பந்தில் பிரெட்டோரியஸ் அவுட் ஆனார். தொடர்ந்து, பேட்டிங் செய்ய வந்த பிராவோ, சிங்கிள் எடுக்க கடைசி நான்கு பந்தில் சென்னை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. பேட்டிங் பக்கம் இருந்த தோனி, மூன்றாவது பந்தை சிக்சருக்கும், நான்காவது பந்தை பவுண்டரிக்கும் அனுப்பி இருந்தார்.
இதன் பின்னர், இரண்டு பந்துகளுக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலை வந்ததும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள், இன்னும் பரபரப்பானார்கள். ஐந்தாவது பந்தில் வேகமாக ஓடி இரண்டு ரன்கள் எடுத்த தோனி, கடைசி பந்தை பவுண்டரியாக மாற்றி மும்பை அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருந்தார். பினிஷிங்க்கு பெயர் போன 'Vintage' தோனி, மீண்டும் வந்து விட்டதாக ரசிகர்கள் உற்சாகத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.
தோனிக்கு நன்றி சொன்ன ஜடேஜா
இதுவரை 7 போட்டிகள் ஆடியுள்ள சிஎஸ்கே, இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், போட்டியை முடித்து வைத்த தோனியை பார்த்து, ஜடேஜா செய்த விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
போட்டி முடிந்த பின்னர், இரு அணி வீரர்களும் மாறி மாறி கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அப்போது, மைதானத்தை விட்டு வந்த தோனியை பார்த்த ஜடேஜா, அவர் அருகே வந்ததும் தொப்பியை தலையில் இருந்து எடுத்து, தலை வணங்கிய படி தனது நன்றிகளைத் தெரிவித்து கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு… https://www.behindwoods.com/bgm8/