"நல்லா தாங்க பேட்டிங் பண்ணிட்டு இருந்தேன்.. ஆனாலும் டீம்'ல இருந்து தூக்கிட்டாங்க.." புதுசாக கெளப்பி விட்ட ரஹானே
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி வீரர் ரஹானே தெரிவித்துள்ள கருத்து, கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரரான ரஹானே, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, டெஸ்ட் போட்டியியல் அதிக தடுமாற்றத்தைக் கண்டு வருகிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டில், 13 டெஸ்ட் போட்டிகள் ஆடிய ரஹானே, அதில் 479 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரியும் 20 வரை தான் உள்ளது.
புஜாரா - ரஹானே
ரஹானேவை போல மற்றொரு சீனியர் பேட்ஸ்மேனான புஜாராவும், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருகிறார். அடுத்ததாக வரும் டெஸ்ட் தொடர்களில், புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இரண்டு வீரர்களையும், டெஸ்ட் அணியில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர். அதே போல, இவர்கள் இடத்தில், இந்திய அணியின் இளம் வீரர்களை களமிறக்கச் செய்து, இந்திய டெஸ்ட் அணியை தயார்ப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
ஃபார்ம் அவுட்
இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் தன்னுடைய ஃபார்ம் அவுட் குறித்து ரஹானே மனம் திறந்து பேசியுள்ளார் . இது பற்றி அவர் கூறுகையில், 'கடந்த 2 முதல் 3 ஆண்டுகளில், நான் ஒரே ஒரு வடிவிலான கிரிக்கெட் போட்டியைத் தான் தொடர்ந்து ஆடி வருகிறேன். அதே வேளையில், கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சி கிரிக்கெட் போட்டித் தொடர்களும் நடைபெறவில்லை. இதனால், டெஸ்ட் போட்டிக்கு இடையே வேறு எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் ஆட முடியாமல் வீட்டில் தான் இருந்து வந்தேன்.
தன்னம்பிக்கை
நீங்கள் எவ்வளவு தான் பயிற்சியும், வலைப்பயிற்சியும் மேற்கொண்டாலும், அதிலிருந்து உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கப் போவதில்லை. அதிக போட்டிகளில் களமிறங்குவதன் மூலம் தான், உங்களுடைய தன்னம்பிக்கை நிலை உயரும். இதற்கு எல்லாம் முன்பாக, நான் இந்திய ஒரு நாள் அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்று, மிகவும் சிறப்பாக ஆடி வந்தேன்.
அணியில் இடமில்லை
திடீரென, இந்தியாவின் ஒரு நாள் அணியில் இருந்து நான் நீக்கப்பட்டேன். அதனை பற்றி பேச நான் விரும்பவில்லை. எனது கடந்த காலத்திற்குள்ளும் நான் போக விரும்பவில்லை. ஆனால், 2014, 15,16 மற்றும் 17 ஆகிய ஆண்டுகளில், சிறப்பாக தான் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் ஆடி வந்தேன். அதன் பிறகு, விளையாடுவதற்கான அதிக வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. நான் களமிறங்கி வந்த டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே, மிகப் பெரிய இடைவெளி இருந்தது' என ரஹானே தெரிவித்துள்ளார்.
பரபரப்பு
இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக வலம் வந்த ரஹானே, தற்போது தடுமாறி வருவதற்கு, அடிக்கடி போட்டிகள் ஆடாமல் இருந்து வந்தது தான் காரணம் என தெரிவித்துள்ளார். இதற்கு மத்தியில், அவர் இந்திய ஒரு நாள் அணியில் இருந்து, திடீரென ஓரம் கட்டப்பட்டது பற்றி பேசிய விஷயம், சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
