தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ரஹானேவுக்கு பதில் இவரா?- கே.எல்.ராகுல் ஓப்பன் டாக்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுள்ளது. அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விளையாட இருக்கிறது.
முதலில் டெஸ்ட் தொடர் தான் ஆரம்பிக்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி, செஞ்சூரியனில் நடக்க இருக்கிறது. இதற்காக இந்திய அணி தீவிரப் பயிற்சி எடுத்து வருகிறது. குறிப்பாக தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி, இதுவரை ஒரேயொரு டெஸ்ட் தொடரில் கூட வெற்றி பெற்றதில்லை. இந்த முறை அந்த வரலாற்றை மாற்றப் பார்க்கும்.
அதே நேரத்தில் இந்திய அணி சார்பில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கப் போகும் 11 பேர் யார் என்பதிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கு காரணம் சமீப காலமாக இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதே நேரத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் தடுமாறி வருகிறார்கள்.
குறிப்பாக மயான்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ், குல்தீப், முகமது சிராஜ் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் நன்றாக பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் சட்டேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, இஷாந்த் சர்மா ஆகியோர் ஃபார்மில் இல்லாமல் சொதப்பி வருகிறார்கள். இவர்கள் மூவருக்கும் இந்த டெஸ்ட் தொடரானது மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும் எனப்படுகிறது.
குறிப்பாக ரஹானே இந்த தொடரில் சரியாக விளையாடவில்லை என்றால், அணியில் இருந்து நீக்கப்படலாம் எனப்படுகிறது. அவர் இந்திய அணிக்காக 5-வது ஆக களமிறங்கி வருகிறார். அதே இடத்தில் இறங்கி விளையாட ஹனுமா விஹாரியும் உள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் யாராவது ஒருவருக்குத் தான் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து தொடக்க வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல், ‘அஜிங்கியாவா அல்லது ரஹானேவா என்று தேர்வு செய்வது சிரமமான முடிவாகத் தான் இருக்கும். ரஹானே இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக முக்கியமான வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் அணியில் முக்கிய ஆளாக இருக்கிறார். அதேபோல ஸ்ரேயாஸ் மற்றும் ஹனுமாவும் நன்றாக விளையாடி வருகிறார்கள். எனவே 5-ம் இடத்தில் இறங்கப் போவது யார் என்பது குறித்து நாளை நாங்கள் குழுவாக பேசி முடிவெடுப்போம். அது குறித்து தெரிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
ராகுலின் கருத்து மூலம் ரஹானேவின் இடம் அணியில் ஊசலாடுகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.