'நானும் நீயும் மௌனத்தில் பேசணும்...' தன் குழந்தையை அள்ளியபடி புவ்னேஷ்வர் குமார்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவ்னேஷ்வர் குமார். அவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு நுபுர் நாகர் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் சமீபத்தில் தம்பதியருக்கு முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

புவ்னேஷ்வரின் மனைவி நுபுர், கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதியே பெண் குழந்தையைப் பெற்றெடுத்து உள்ளார். ஆனால், குழந்தை பிறந்த உடனேயே அது குறித்து உலகுக்கு அறிவிக்க வேண்டாம் என்று இளம் தம்பதியினர் முடிவெடுத்து உள்ளனர். அதன்படி சுமார் ஒரு மாதத்துக்குப் பின்னர் தங்களின் மகிழ்ச்சி செய்தியை உலகுக்குத் தெரிவித்து உள்ளனர். புவ்னேஷ்வரும் நுபுரும் தங்களின் குழந்தையின் பெயர் குறித்த எந்த விபரத்தையும் தெரிவிக்கவில்லை.
புவ்னேஷ்வர், தனது இன்ஸ்டா புகைப்படத்தில் ஆசையுடன் குழந்தையை ஏந்தியபடி நிற்கிறார். அருகிலேயே அவரது மனைவி நுபுரும் குழந்தையை அன்புடன் பார்க்கிறார். எந்த வித கேப்ஷனும் இல்லாமல், இரண்டு இதய இமோஜிக்களை மட்டும் பதிவிட்டு குழந்தை பிறந்த செய்தியை உலகுக்கு அறிவித்து உள்ளார் புவி. 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதிதான் புவிக்கும் நுபுருக்கும் திருமணம் நடந்தது.
இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களது திருமண நாளை அடுத்த தினத்தில், அதாவது நவம்பர் 24-ம் தேதி குழந்தை பிறந்துள்ளது புவிக்கும் நுபுருக்கும் கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 31 வயதாகும் புவ்னேஷ்வர் குமார், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.
அவர் விஜய் ஹசாரே கோப்பையில் உத்தர பிரதேச அணிக்காக விளையாடி வந்தார். சென்ற மாதம் அவருக்கு குழந்தை பிறந்த செய்தி கிடைத்தவுடன், ராஞ்சியில் இருந்த புவி உடனடியாக விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கிருந்து தன் குழந்தையைப் பார்க்க விரைந்தார். அப்போது முதல் அவர் தன் குடும்பத்துடன்தான் இருந்து வருகிறார்.
புவ்னேஷ்வர் குமார், இந்த இன்ப செய்தியை இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து, பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இப்படி தனிப்பட்ட வாழ்க்கையில் புவிக்கு மகிழ்ச்சிகரமான விஷயங்கள் நடந்து வந்தாலும் கிரிக்கெட் வாழ்க்கையில் சற்றுப் பின்னடைவுதான். காரணம், கடந்த சில கிரிக்கெட் தொடர்களில் இந்தியா சார்பில் புவி பங்கேற்ற போட்டிகளில் அந்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. குறிப்பாக டி20 உலகக் கோப்பையிலும் சாதிக்கவில்லை புவி.
அதைத் தொடர்ந்து நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் பங்கெடுத்து வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். இப்படி தொடர்ந்து பவுலிங் ஃபார்ம் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் புவி, அடுத்ததாக தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளி்ல் இடம் பெறவில்லை. அவர் விரைவில் இந்திய அணிக்கு கம்-பேக் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மற்ற செய்திகள்
