"இப்டி எல்லாம் ஆடுனா 'இந்தியா' டீம்'ல எப்படி'ப்பா 'சான்ஸ்' கெடைக்கும்?.." 'இந்திய' வீரர் மீது 'நெஹ்ரா' வைத்த கடுமையான 'விமர்சனம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசனில், வார்னர் (Warner) தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (SRH), இதுவரை 2 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், இரண்டிலுமே தோல்வியடைந்துள்ளது.
இதில், கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டியிலும், ஹைதராபாத் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த போதும், கடைசியில் சரிவர பேட்டிங் அமையாததால், தோல்வியை தழுவியிருந்தது. கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில், ஹைதராபாத் அணி வீரர் மனிஷ் பாண்டே (Manish Pandey), கடைசி வரை களத்தில் இருந்த போதும், இறுதி ஓவர்களில் அவரால் பவுண்டரிகளை அடிக்க முடியாமல் போனதால் தோல்வி அடைந்திருந்தது.
அதே போல, பெங்களூர் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியிலும் மனிஷ் பாண்டே, 39 பந்துகளில் 38 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால், 6 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி தோல்வி பெற்றது. இதனால், ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை மற்றும் மனிஷ் பாண்டேவின் பேட்டிங் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது.
பல முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள், டி 20 போட்டிக்கான ஆட்டம் இதுவல்ல என்று மனிஷ் பாண்டேவின் பேட்டிங்கை விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா (Ashish Nehra), மனிஷ் பாண்டேவின் பேட்டிங் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
'டி 20 போட்டிகளில் மனிஷ் பாண்டே இப்படி ஆடுவதால் தான், அவரால் சர்வதேச இந்திய அணியில் நிரந்தரமாக ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. அவர் இந்திய அணிக்காக எப்போதோ அறிமுகமாகி விட்டார். ஆனால், அதன் பிறகு வந்த ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள், குறுகிய காலத்தில், மனிஷ் பாண்டேவை விட அதிகம் முன்னேறிச் சென்று விட்டார்கள்.
இதற்கு காரணம், மனிஷை விட மற்ற வீரர்கள் அனைவரும் வித்தியாசமாக ஆடக் கூடியவர்கள். அது மட்டுமில்லாமல், நெருக்கடியான சமயங்களிலும் அதனை சரியாக உணர்ந்து கொண்டு, சிறப்பாக கையாளக் கூடியவர்கள். இதனால், தான் மனிஷ் பாண்டேவால், இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை' என அவரின் ஆட்டம் குறித்து நெஹ்ரா விமர்சனம் செய்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜாவும், மனிஷ் பாண்டேவுக்கு இனிமேல் ஹைதராபாத் அணியில், ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.