"என்ன நடந்தாலும் சரி.. 'அத' மட்டும் நான் செய்யவே மாட்டேன்.." ஊரே ஒன்று கூடி வைத்த 'விமர்சனம்'.. ஆனாலும் கொஞ்சம் கூட அசராத 'சாம்சன்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் அணி அசத்தலாக ஆடி வெற்றி பெற்றிருந்தது.
டெல்லி அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய டேவிட் மில்லர், சிறப்பாக ஆடி அரை சதமடித்து அவுட்டானார். இருந்த போதும், கடைசியில், ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த அணியின் கைவசம் 3 விக்கெட்டுகள் இருக்க, களத்தில் நின்ற கிறிஸ் மோரிஸ் (Chris Morris), டாம் குர்ரான் மற்றும் ரபாடா ஆகியோரின் பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடித்து அசத்தி, 2 பந்துகள் மீதம் வைத்து தங்களது அணியை வெற்றி பெறச் செய்தார்.
ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில், அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் (16.25 கோடி) என்ற பெருமையுடன் ராஜஸ்தான் அணியில் இணைந்த கிறிஸ் மோரிஸ், பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில், பவுலிங்கில் சொதப்பியிருந்தார். அதே போல, அந்த போட்டியில், 222 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில், சஞ்சு சாம்சன் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தனியாளாக, களத்தில் நின்று போராடிய சஞ்சு சாம்சன் (Sanju Samson), சதமடித்த போதும், 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. இந்த போட்டியின் கடைசி இரண்டு பந்துகளில், ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட போது, சாம்சன் மற்றும் மோரிஸ் ஆகியோர் களத்தில் இருந்தனர். இந்த பந்தை எதிர்கொண்ட சாம்சன், பீல்டரை நோக்கி வேகமாக அடித்தார். அப்போது சிங்கிள் ஓட வாய்ப்பு இருந்த போதும், சாம்சன் ரன் ஓடவில்லை.
பதிலுக்கு மோரிஸ் வேகமாக ஓடி மறுபக்கம் வரை சென்ற போதும், சாம்சன் ரன் ஓட மறுத்து விட்டார். இதனால், மோரிஸ் சற்று விரக்தியடைந்தார். தொடர்ந்து, கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க சாம்சன் முற்பட, பவுண்டரி லைனுக்கு அருகே கேட்ச்சாகி, ராஜஸ்தான் அணி வெற்றியைக் கோட்டை விட்டது.
இதனிடையே, நேற்றைய போட்டியில், மோரிஸ் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள், முதல் போட்டியில், சஞ்சு சாம்சன் சிங்கிள் ஓடி இருந்தால், மோரிஸ் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்திருப்பார் என சாம்சனை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மோரிஸ்ஸிற்கு சிங்கிள் கொடுக்காதது பற்றி, நேற்றைய வெற்றிக்கு பிறகு பேசிய சாம்சன், 'நான் எப்போதும் எனது பேட்டிங்கை பற்றி, அதிகம் மறுபரிசீலனை செய்து கொண்டே இருப்பேன். அப்படி வைத்து பார்க்கும் போது, பஞ்சாப் அணிக்கு எதிரான அந்த போட்டியை, 100 முறை திரும்ப ஆடினால் கூட, நான் அந்த சிங்கிள் ரன்னை ஓடியிருக்க மாட்டேன்' என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய போட்டியில், மோரிஸ் சிறப்பாக ஆடிய போதும், சஞ்சு சாம்சன், தன் மீது அதிக தன்னம்பிக்கை வைத்து, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.