'காயம் காரணமாக இந்தியா திரும்பும் அடுத்த வீரர்’... ‘3-வது போட்டியில் இவருக்குத்தான் வாய்ப்புகள் அதிகம்’... ‘வெளியான மகிழ்ச்சி தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், காயம் காரணமாக 2-வது டெஸ்ட்டின் பாதி போட்டியில் வெளியேறியநிலையில், தற்போது அவர் இந்தியா திரும்புகிறார்.

மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்து 131 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே ஜோ பர்ன்ஸ் (4) விக்கெட்டை உமேஷ் யாதவ் பந்துவீச்சில் இழந்தது.
உமேஷ் யாதவ் 3-வது ஓவரை வீசியபோது, திடீரென அவரின் முழங்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு மைதானத்தில் அமர்ந்தார். அவரால் தொடர்ந்து பந்துவீச இயலாமல் ஓய்வறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து, உமேஷ் யாதவ் வீசிய ஓவரில் மீதமிருந்த 3 பந்துகளையும் சிராஜ் வீசினார். முதல் டெஸ்ட் போட்டியில் சோபிக்க முடியாத நிலையில், 2-வது டெஸ்ட் போட்டியில் தான் உமேஷ் யாதவ் நன்றாக பந்துவீசினார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டதும் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் வருந்தினர்.
காயம் காரணமாக அடுத்த போட்டியிலும் விளையாடுவது சந்தேகம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அவருக்கு ஸ்கேன் பரிசோதனை எடுக்கப்பட்டு, அதன் முடிவு வந்த பின்னர்தான் காயத்தின் தன்மை தெரியவரும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், அவர் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். இதையடுத்து இந்தியா திரும்பும் உமேஷ் யாதவ், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி பெற்று, பிப்ரவரியில் நடைபெற உள்ள இங்கிலாந்து தொடருக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காயம் காரணமாக முன்னணி வீரர் இஷாந்த் சர்மா, புவனேஷ்குமார் ஆகியோர் இடம்பெறவில்லை. மேலும் முதல் போட்டியோடு முகமது ஷமி எலும்புமுறிவு காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். தற்போது உமேஷ் யாதவ் காயம் அடைந்துள்ளதால், இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அடுத்தப் போட்டியில், அவருக்கு பதிலாக நவ்தீவ் சைனி, ஷர்த்துல் தாக்கூர், தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதிலும், நடராஜனுக்கே அதிக வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 3-வது டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி சிட்னியிலும், கடைசிப் போட்டி ஜனவரி 15-ல் பிரிஸ்பேனிலும் நடக்க உள்ளது.
This doesn't look good for Umesh Yadav. He's pulled up gingerly and is hobbling off the field #AUSvIND pic.twitter.com/ncOESNol2m
— 7Cricket (@7Cricket) December 28, 2020

மற்ற செய்திகள்
