"தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்.." மைதானத்தில் கே எல் ராகுல் செய்த விஷயம்.. வேற லெவலில் பாராட்டும் ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போது ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது.

ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்ட பல வீரர்கள் இல்லாத காரணத்தினால், இந்திய அணியை கே எல் ராகுல் இந்த தொடரில் வழி நடத்தி வருகிறார்.
அது மட்டுமில்லாமல், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கே எல் ராகுல், நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளார்.
அந்த வகையில், இந்தியா மற்றும் ஜிம்பாபவே அணிகளுக்கு இடையே, நேற்று (18.08.2022) நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாபவே அணி, 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து, 189 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். 31 ஆவது ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி, ஒரு விக்கெட்டைக் கூட இழக்காமல் வெற்றி பெற்றிருந்தது. ஷிகர் தவான் 81 ரன்களும், சுப்மன் கில் 82 ரன்களும் எடுத்திருந்தனர்.
இதன் காரணமாக, மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரை 1 - 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்தியா மற்றும் ஜிம்பாபவே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி, நாளை (20.08.2022) நடைபெறுகிறது. முன்னதாக, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஒரு நாள் தொடரை கே எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி இழந்திருந்தது.
இதனால், அதிக விமர்சனத்தினை சந்தித்த கே எல் ராகுலின் கேப்டன்சியில், தற்போது ஜிம்பாபவே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெற்றிகரமாக தொடங்கி உள்ளது. இந்நிலையில், முதல் ஒரு நாள் போட்டிக்கு முன்பாக, கே எல் ராகுல் செய்த செயல் தொடர்பான வீடியோ ஒன்று, பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
பொதுவாக, ஒரு கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக, ஆடும் இரு அணிகளின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதும் வழக்கம். அப்படி தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பாக, வீரர்கள் அணிவகுத்து நிற்பார்கள். அந்த சமயத்தில், அதற்கு மரியாதையை கொடுக்கும் விதமாக, தனது வாயில் இருந்த சுவிங் கம்மை வேகமாக அகற்றினார் கே எல் ராகுல். இது தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலான நிலையில், தேசிய கீதத்தை மதிக்கும் வகையிலான கே எல் ராகுலின் செயல்பாடு, ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
Proud of you, Captain KL Rahul! ❤️pic.twitter.com/5Xuvq5mag8
— Kunal Yadav (@kunaalyaadav) August 18, 2022

மற்ற செய்திகள்
