‘7 தடவை அவர் ஓவர்லையே அவுட்’!.. உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனை ‘கதிகலங்க’ வச்ச இங்கிலாந்து பவுலர்.. இது இந்தியாவுக்கு எச்சரிக்கை மணியா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 முறை ஒரே பந்து வீச்சாளரிடம் அவுட்டாகியுள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் அறிமுக வீரர் டெவன் கான்வே களமிறங்கினர்.
இதில் இங்கிலாந்து அணியின் ஒல்லி ராபின்சன் வீசிய ஓவரில் டாம் லாதம் (23 ரன்கள்) போல்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் (13 ரன்கள்), ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் போல்டாகினார். இதனைத் தொடர்ந்து ராஸ் டெய்லர் (14 ரன்கள்) எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார்.
நியூஸிலாந்து அணியின் மூத்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகினாலும், மறுமுனையில் அறிமுக வீரர் டெவன் கான்வே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 246 ரன்களை நியூஸிலாந்து அணி எடுத்தது. இதில் டெவன் கான்வே 136 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளார். இதன்மூலம் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த 12-வது நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையை டெவன் கான்வே படைத்துள்ளார்.
இந்த நிலையில் இப்போட்டியில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனின் விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 முறை கேன் வில்லியம்சனை அவர் அவுட்டாகியுள்ளார். உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சனுக்கு நெருக்கடி கொடுத்ததுபோல, இந்திய அணிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன் சவாலாக இருப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் வரும் 18-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி இன்று இங்கிலாந்து செல்கிறது. இந்த போட்டி முடிவடைந்ததும், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த சூழலில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது ஃபார்ம் இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் இருக்கும் என சொல்லப்படுகிறது. முன்னதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் வகையில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சு இருக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
YESSSS @jimmy9 with a huge wicket! 🐐
Scorecard & Videos: https://t.co/7Bh6Sa3TPf#ENGvNZ pic.twitter.com/2Hke3L8Sqv
— England Cricket (@englandcricket) June 2, 2021