'நீங்க செஞ்ச இந்த உதவிய வாழ்க்கைல மறக்கமாட்டோம்'!.. மும்பை இந்தியன்ஸ் அணி செய்த காரியத்தால்... வணங்கி நிற்கும் பிசிசிஐ!.. நெகிழ்ந்த வீரர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 2021 தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து, வெளிநாட்டு வீரர்களை அவர்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு படி மேலே சென்று சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஐபிஎல் 2021 தொடரின் அணி வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தொடரை ஒத்திவைக்கும் முடிவை பிசிசிஐ எடுத்து அறிவித்தது. பாதியிலேயே தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் பல கோடி ரூபாய் இழப்பிற்கு பிசிசிஐ உள்ளாகியுள்ளது.
எனினும், இந்த நேரத்தில் வெளிநாட்டு வீரர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வேலையில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. நேற்றைய தினம் இங்கிலாந்து வீரர்கள் தங்களது நாடுகளுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் அங்கு தங்களது குவாரன்டைனை முடித்துக் கொண்டு தங்களது வீடுகளுக்கு செல்வார்கள்.
இதையடுத்து ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் அடுத்தடுத்து தங்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது அணியை சேர்ந்த வெளிநாட்டு வீரர்களை தங்களுடைய சொந்த சார்ட்டர் விமானத்தில் அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், அந்த விமானத்தில் மற்ற அணிகளை சேர்ந்த வெளிநாட்டு வீரர்களையும் இணைய அழைப்பு விடுத்துள்ளது.
வெளிநாட்டு வீரர்களை அவர்களது நாடுகளுக்கு அனுப்பி வைப்பது பிசிசிஐயின் வேலை என்று இருக்காமல் தங்களது அணி வீரர்களுக்கு பொறுப்பேற்று அவர்களை சொந்த விமானத்தில் அனுப்பி வைக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் இந்த செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது.