'எவ்ளோ முட்டாள்தனமான விஷயம் 'இது'!.. 'நீங்க சூர்யகுமாருக்கு செஞ்சத... சேவாக்கிடம் செய்ய முடியுமா'?.. ரோகித்தை வெளுக்கும் ஜாம்பவான்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா எடுத்த ஒரு முடிவு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் படுமோசமாகச் சொதப்பியதால் அணி 150 ரன்களை கூட எட்டவில்லை. இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர்கள் அஜய் ஜடேஜா, விரேந்தர் சேவாக் ஆகியோர் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் துவக்க வீரர் குவின்டன் டி காக் ஆட்டமிழந்ததும், அணியின் ஸ்கோர் வேகத்தில் தொய்வு ஏற்பட்டது. அடுத்து மூன்றாவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஷான் கிஷன் களத்திற்குள் வந்தார். இவர் தொடர்ந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மும்பை அணி பவர் பிளே முடிவில் 21/1 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
தொடர்ந்து திணறி வந்த இஷான் கிஷன் 17 பந்துகளை எதிர்கொண்டு, 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால், மும்பை அணி 10 ஓவர்கள் முடிவில் 49/2 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெத் ஓவர்களில் அதிரடி காட்டக் கூடிய கெய்ரன் பொல்லார்ட், ஹார்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா போன்றவர்களும் கடைசி நேரத்தில் சொதப்பியதால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 131/6 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ரோஹித் ஷர்மா 63 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் அடித்திருந்தார்கள்.
இந்நிலையில், தற்போது இதுகுறித்துப் பேசிய சேவாக், சூர்யகுமாரை மூன்றாவது இடத்தில் களமிறக்காததுதான் ஸ்கோர் உயராமல் இருந்ததற்கு காரணம். அடுத்த போட்டியில் இதே தவறை செய்யக் கூடாது என்றார்.
"கடந்த போட்டிகளில் சூர்யகுமார் மூன்றாவது இடத்தில் களமிறங்கி அரை சதம் அடித்திருக்கிறார். இவரைப் பஞ்சாப் அணிக்கு எதிராக முன் கூட்டியே களமிறங்கியிருந்தால் பவர் பிளேவில் ரன் மழை பொழிந்திருப்பார். ஆனால், எதற்காக இஷான் கிஷனை முன்கூட்டியே அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை. அடுத்த போட்டிகளில் இதே தவறை செய்யக் கூடாது" எனத் தெரிவித்தார்.
அடுத்துப் பேசிய அஜய் ஜடேஜா, சேவாக் கூறியதை சரி என்றார். "சூர்யகுமாரை முன் கூட்டியே களமிறங்கியிருக்க வேண்டும். இடத்தை மாற்றிக் களமிறக்கப்படுவதால் பேட்ஸ்மேனுக்கு மனதளவில் பிரச்சினை ஏற்படும். இதனால், அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியாத நிலை கூட ஏற்படலாம். இதே, விரேந்தர் சேவாக்கிடம் நீங்கள் ஓபனிங் களமிறங்க வேண்டாம் எனக் கூற முடியுமா? அப்படிக் கூறினால் என்ன நடக்கும் என அனைவருக்கும் தெரியும். அது பெரிய பிரச்சினையில்தான் போய் முடியும்" எனக் கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது அடுத்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஏப்ரல் 29ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது.