சென்னையில் நடக்கவிருக்கும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இவற்றில், முதல் 2 போட்டிகள் சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும்.
இதன்படி முதல் போட்டி வருகிற 5ம் தேதியும், 2வது போட்டி வருகிற 13ந்தேதியும் நடைபெறுகிறது.
கொரோனா பாதிப்புகளால் சென்னை அதிகம் பாதிக்கப்பட்ட சூழலில் ரசிகர்களை அனுமதிப்பது சந்தேக நிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து விளையாடும் 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை பி.சி.சி.ஐ. அதிகாரி இன்று உறுதிப்படுத்தி உள்ளார்.
மேலும் 3வது டெஸ்ட் பகல் இரவு போட்டியாக ஆமதாபாத் நகரில் உள்ள மோதேரா ஸ்டேடியத்தில் நடைபெறும். இதே ஸ்டேடியத்தில் 4வது போட்டியும் நடைபெற உள்ளது.
இந்த இரு ஸ்டேடியங்களிலும் போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்களை நாங்கள் வரவேற்கிறோம் என அவர் கூறினார்.
இதேபோன்று தமிழ்நாடு கிரிக்கெட் கூட்டமைப்பு மற்றும் பி.சி.சி.ஐ. இடையேயான பேச்சுவார்த்தையில் வெற்றி கிட்டுமெனில் 2வது டெஸ்டில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தளர்வை அடுத்து, 50% ரசிகர்களுக்கு பி.சி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது. இந்தச் செய்தியால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்
