துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட முன்னாள் ‘கிரிக்கெட்’ வீரர்.. ஆஸ்திரேலியாவில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 50 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் மேகில் (Stuart MacGill), இதுவரை 44 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 184 முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். சுழற்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் மேகில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 208 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளும், முதல் தர கிரிக்கெட் போட்டியில் 774 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இதனை அடுத்து கடந்த 2008-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நபர்கள் துப்பாக்கி முனையில் ஸ்டூவர்ட் மேகிலை கடத்தியதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த நியூ சவுத் வேல்ஸ் போலீசார் (New South Wales Police), ‘கடந்த ஏப்ரல் 14-ம் தேதி இரவு 8 மணியளவில் 46 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் க்ரெமோர்ன் (Cremorne) பகுதியில் வைத்து ஸ்டூவர்ட் மேகிலை கடத்தியுள்ளார். அப்போது வந்த மேலும் சிலர் அவரை துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
சில மணிநேரம் காரில் அவரை கடத்திச் சென்ற அந்த கும்பல் பெல்மோர் (Belmore) பகுதியில் அவரை இறக்கி விட்டுச் சென்றுள்ளது’ என ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்துள்ளதாக India Today பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்டூவர்ட் மேகிலை கடத்திய 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
முன்னதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங்கின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், அவரது காரை திருடிச் சென்ற சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் துப்பாக்கி முனையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.