'நெருங்கும் ஏலம்'...'இந்த 4 பேரையும் கழற்றி விடலாம்'...புதிய திட்டத்தில் 'சென்னை சூப்பர் கிங்ஸ்'?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Nov 13, 2019 12:22 PM
அடுத்த ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான்கு சீனியர் வீரர்களை கழட்டிவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்ற ஐபிஎல் டி- 20 கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ஐபிஎல் அணிகளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உண்டு என கூறலாம். சென்னை அணி விளையாடுகிறது என்றால் சொல்லவே தேவையில்லை. மைதானமே ரசிகர்களின் கரகோஷத்தால் அதிரும்.
இதனிடையே சென்னை அணியில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் என்பதால், இந்த அணிக்கு டாடி ஆர்மி என்ற பெயரும் உண்டு. இதனிடையே அடுத்த வருடம் நடக்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம், வரும் டிசம்பர் மாதம் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இதனால் தங்களது விருப்பமான வீரர்கள் எந்தந்த அணியில் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக உள்ளது.
இந்நிலையில் ஏலத்துக்கு முன்னதாக ஒவ்வொரு அணிகளும் தக்கவைக்கும் வீரர்களும், மாற்று வீரர்கள் என இறுதி பட்டியலை தயார் செய்ய வேண்டும். அந்த வகையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அஸ்வினை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கைமாற்றியது. அந்த வகையில் சென்னை அணி நிர்வாகம் தங்கள் அணியில் இருந்து நான்கு சீனியர் வீரர்களை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் அம்பதி ராயுடு, முரளி விஜய், சார்துல் தாகூர், கேதர் ஜாதவ் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டுவருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முரளி விஜய் இரு வாய்ப்புகளை மட்டுமே பெற்றார். ரூ. 7.8 கோடிக்கு வாங்கப்பட்ட ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் பெரிய அளவு ஜொலிக்கவில்லை. அதேநேரத்தில் உடற்தகுதியிலும் கேதர் சிக்கலில் உள்ளார். மேலும் கடந்த 2018 ஐபிஎல் தொடருக்கு முன்பாக கரண் சர்மாவை சென்னை அணி ரூ. 5 கோடிக்கு வாங்கியது. ஆனால் அவருக்கும் பெரிய அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனையடுத்து கோடி கணக்கில் எடுக்கப்பட்ட வீரர்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் அவர்களை ஏலத்துக்கு முன்பான இறுதிபட்டியலில் சேர்க்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.