‘இதை செய்யுனு சொன்னா உடனே செஞ்சிருவார்’!.. ‘அவர் ஆடியே ஆகணும்னு உறுதியாக இருந்தேன்’.. இளம்வீரரை புகழ்ந்து தள்ளிய இந்திய பவுலிங் கோச்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் இளம்வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் குறித்து பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் புகழ்ந்து பேசியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. இதில் ஹைதராபாத்தை சேர்ந்த இளம்வீரர் முகமது சிராஜின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தன் தந்தையின் இழப்பையும் தாங்கிக் கொண்டு நாட்டுக்காக விளையாடினார்.
இந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் இந்திய பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருணை நேர்காணல் எடுத்தார். அப்போது முகமது சிராஜ் குறித்து பாரத் அருண் பேசினார். அதில், ‘சிராஜுக்கு சர்வதேச அளவில் வெற்றி பெறுவதற்கான வேட்கையும், கோபமும் உண்டு. நான் ஆர்சிபியில் அவரை நெட் பவுலராகப் பார்த்தேன். அப்போது விவிஎஸ் லஷ்மணிடம், இந்த பையன் பிரமாதமாக பந்து வீசுகிறான் என்று சொன்னேன். நீங்கள் இவரைப் பயன்படுத்தலாமே என்று கூறினேன்.
ஹைதராபாத் கோச்சாக சென்ற போது சிராஜை அழைத்தேன். அப்போது சிராஜ் உத்தேச அணியில் கூட இல்லை. மீண்டும் அவர் பந்து வீசுவதைப் பார்த்தபோது மேலும் ஈர்க்கப்பட்டேன். நான் அன்று எப்படி பார்த்தேனோ அதேவேகம் உத்வேகத்துடன் சிராஜ் வீசினார். சிராஜ் ஆடியே ஆகவேண்டும் என உறுதியாக இருந்தேன்.
சிராஜிடம் இன்னொரு பலம் என்னவெனில் நாம் இதைச்செய் என்றால் உடனே செய்து விடுவார். இப்படி வீசு என்றால் அப்படியே வீசுவார். ஆனால் ஒருசில நேரங்களில் தானாகவே சில சோதனை முயற்சிகளில் ஈடுபடுவார். அப்போது நான் அவரை சத்தம் போடுவேன். சிராஜின் வெற்றிக்குக் காரணம் அவரது தன்னம்பிக்கைதான்’ என பாரத் அருண் கூறினார்.

மற்ற செய்திகள்
