செஞ்சுரியன் மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளது.

கடந்த பாக்சிங் டே அன்று ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 327 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டான நிலையில், தெனாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில், 197 ரன்களுக்கு சுருண்டது.
பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு, 305 ரன்கள், இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்களை தென்னாப்பிரிக்க அணி எடுத்திருந்தது.
வரலாறு படைத்த இந்தியா
இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்புகள் இருந்த நிலையில், கடைசி நாள் போட்டி இன்று ஆரம்பமானது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், தென்னாப்பிரிக்க அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 191 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோலி அண்ட் கோ
அது மட்டுமில்லாமல், தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் மைதானத்தில், இந்திய அணியின் முதல் வெற்றியாகவும் இது பதிவானது. அது மட்டுமில்லாமல், ஒரு ஆசிய அணி, செஞ்சுரியன் மைதானத்தில் பெற்ற முதல் வெற்றி ஆகவும் இது பதிவானது. கடந்த சில ஆண்டுகளாக, வெளிநாட்டு மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா, தற்போதும் அதனை நிரூபித்துள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கும் நிலையில், இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்க மண்ணில், முதல் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய சாதனையும், கோலி அண்ட் கோவிற்கு வந்து சேரும்.
இந்திய அணியின் சாதனை
அதே போல, ஆசியாவுக்கு வெளியே, ஒரே ஆண்டில் 4 டெஸ்ட் வெற்றிகளை இரண்டாவது முறையாக (இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டில்), இந்த ஆண்டில் இந்திய அணி பதிவு செய்துள்ளது. சாதனை வெற்றி பெற்ற இந்திய அணியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
