2 இன்னிங்ஸிலும் ஒரே மாதிரி வீழ்ந்த விராட் கோலி... அடுத்து டிரெஸ்ஸிங் ரூமில் நடந்தது இதுதான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி, தற்போது தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. நான்காவது நாள் ஆட்டமான இன்று இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

சற்று முன்னர் வரை இந்திய அணி, 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி, தற்போது தென் ஆப்ரிக்காவை விட 304 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் ஆட்டம் சுவாரஸ்யமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாட ஆரம்பித்த இந்திய அணி, தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. குறிப்பாக கேப்டன் விராட் கோலி 31 பந்துகளுக்கு 18 ரன்கள் எடுத்து நன்றாக விளையாடி வந்தார். ஆனால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியில் சென்ற பந்தை முதல் இன்னிங்ஸில் எப்படி எட்ஜ் செய்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனாரோ, அதே போல இரண்டாவது இன்னிங்ஸிலும் விக்கெட்டை பறிகொடுத்தார்.
விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் அவ்வப்போது அரைசதங்கள் அடித்து வந்தாலும், 2019-ம் ஆண்டுக்குப் பின்னர் இன்னும் ஒரேயொரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வருகிறார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தானே விக்கெட்டை தூக்கியெறியும் முறை பலத்த கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கின்றன.
இரண்டாவது இன்னிங்ஸில் தனது விக்கெட்டை இழந்த பின்னர் டிரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்ற கோலி, மீண்டும் மீண்டும் தான் அவுட்டான விதத்தையே டிவியில் பார்த்துள்ளார். ரீப்ளேவில் அதைப் பார்த்துப் பார்த்து புலம்பியபடி இருந்துள்ளார். குறிப்பாக தன்னைத் தானே திட்டிக் கொண்டு அங்கும் இங்கும் விறு விறுவென நடந்துள்ளார். இவை அனைத்தும் இன்றைய போட்டியின் போது ஒளிபரப்பானது.
நெட்டிசன்களும் விராட் கோலியின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
