"எத்தனை நாள் 'கனவு' தெரியுமாங்க இது??.." 'டிராவிட்' குறித்து வெளியான 'தகவலால்'.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இந்திய 'ரசிகர்கள்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்றின் காரணமாக, ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் மோதவுள்ளன.

இங்கிலாந்தில் வைத்து இந்த டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஆடவுள்ளது. இந்த இரண்டு தொடருக்கும் சேர்த்து, இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, இரு தொடர்களும் முடிந்த பிறகு தான், இந்திய அணி சொந்த மண் திரும்பும் என கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கிட்டத்தட்ட 3 மாதத்திற்கும் மேல், இங்கிலாந்தில் தங்கி, இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளை ஆடவுள்ளது. இதனிடையே, இந்த தொடர்களில் இடம்பெறாத இந்திய வீரர்களை வைத்து, ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிராக, ஒரு நாள் மற்றும் டி 20 தொடர்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த தொடரில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், தேவ்தத் படிக்கல், ராகுல் சாஹர் உள்ளிட்ட வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டும் செயல்படுவார்கள் என்றும் தகவல்கள் வலம் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ராகுல் டிராவிட், ஏற்கனவே இந்திய அணியின் U 19 அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். இவரது பயிற்சியில் இந்திய அணி, 2016 ஆம் ஆண்டு நடந்த U 19 உலக கோப்பையின் இறுதி போட்டி வரை முன்னேறியது. மேலும், 2018 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியிருந்தது.
இன்று இந்திய கிரிக்கெட்டில் ஜொலிக்கும் ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, சுப்மன் கில், நாகர்கோட்டி உள்ளிட்ட பல வீரர்கள், டிராவிட்டின் பயிற்சியில் தான் அதிகம் தங்களை மேம்படுத்திக் கொண்டனர். பல திறனுள்ள வீரர்களை தேர்ந்தெடுத்து, அணியை வளர்ப்பதில், தேர்ந்தவரான டிராவிட், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் ஆக வேண்டுமென, ரசிகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நீண்ட நாள் கனவு, இதுவரை நிகழாத நிலையில், தற்போது இலங்கை தொடரில், டிராவிட் பயிற்சியாளர் என வெளிவரும் தகவல் உண்மையாகும் பட்சத்தில், ரசிகர்கள் நிச்சயம் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். அது மட்டுமில்லாமல், இந்த தொடரில், அணி வீரர்களின் தேர்வு தொடங்கி, இந்திய அணியின் ஆட்டத்திறன் என அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

மற்ற செய்திகள்
