போட்டி ஆரம்பிக்கும் முன் இந்திய வீரர்கள் ஏன் இப்படி பண்ணாங்க தெரியுமா..? வெளியான ‘சுவாரஸ்யமான’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியின்போது இந்திய வீரர்கள் செய்த செயல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டி20 உலகக்கோப்பை போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 57 ரன்களும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 39 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளும், ஷதாப் கான் மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 79 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 68 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் அனைவரும் மைதானத்துக்கு வெளியே வரிசையாக முட்டியிட்டனர். இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளோய்ட் என்பவரை அமெரிக்க போலீசார் ஒருவர் தனது கால் முட்டியால் அவரின் கழுத்தை நசுக்கி கொலை செய்தார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதனால் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை கண்டித்து (Black Lives Matter) விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நேற்று இந்திய வீரர்கள் அவ்வாறு செய்தனர். இந்த சம்பவம் நடந்து ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், தற்போது ஏன் இந்திய அணி செய்தது என கேள்வி எழுந்தது.
அதற்கு காரணம், பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டியென்றால் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனமும் இப்போட்டியின் மீதுதான் இருக்கும். இதுபோன்ற முக்கியமான போட்டியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மக்களுக்கு சீக்கிரம் சென்றடையும் என நினைத்து இந்திய வீரர்கள் இதை செய்துள்ளனர் என சொல்லப்படுகிறது.