'கோலி இல்ல... ரோகித் இல்ல... டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா வெல்ல... 'இவர்' தான் ரொம்ப முக்கியம்'!.. முன்னாள் வீரர் அசத்தல் கணிப்பு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் பலவீனத்தைக் கொண்டு இந்திய அணி எவ்வாறு வெற்றி பெற முடியும் என்று இங்கிலாந்தின் முன்னாள் பவுலர் பனேசர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி, இந்தியாவுக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையே சவுதாம்ப்டன் நகரில் நடக்கவுள்ளது. இதில், இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நியூசிலாந்து அணியில் அதிகம் இடது கை வீரர்கள் இருப்பது இந்திய அணிக்கு சாதகமானது என்று பனேசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நியூசிலாந்து சிறப்பான அணி. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கான்வேயின் ஆட்டம் அபாரம். அவர்களிடம் சில இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எனவே, அவர்களுக்கு இந்தியாவின் ஆப் ஸ்பின்னர் அஷ்வின் சிம்ம சொப்பனமாகத் திகழ்வார்.
இங்கிலாந்தில் பலரும் நினைப்பதை விட நியூசிலாந்து சிறப்பாக ஆடி வருகிறது. உலகின் முதன்மை அணியைப் போல ஆடி வருகிறது. இந்தியாவுடனான ஆட்டம் நிச்சயம் அருமையான டெஸ்ட் போட்டியாக இருக்கப்போகிறது. இந்தியாவுக்கும் இந்த இறுதிப் போட்டி எளிதான போட்டியாக இருக்காது.
அதே சமயம், நியூசிலாந்து அணியின் இடது கை பேட்ஸ்மேன்களைப் பார்க்கும்போது இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அஷ்வினின் செயல்பாடே பிரதானமாக இருக்கும். அவர்தான் இரு அணிகளுக்கும் இடையே வித்தியாசமாக இருக்கப் போகிறார்.
அஷ்வின், நியூசிலாந்து அணியின் இடது கை பேட்ஸ்மேன்களை எளிதில் வீழ்த்தினால் அந்த அணிக்குப் பிரச்சினை நேரிடும். அவ்வாறு இல்லையெனில், வேகப்பந்து வீச்சாளர்கள் மீது அழுத்தம் அதிகமாகும். இந்தியாவில் வீசுவதைப் போலவே, அந்த போட்டியிலும் அஷ்வின் பந்து வீசினால் கண்டிப்பாக இந்தியா வலிமையான நிலையில் இருக்கும்.
மேலும், நியூசிலாந்து அணியில் டிம் சவுதி வித்தியாசம் (variation) ஏற்படுத்தும் பவுலர். இங்கிலாந்தில் வெயில் அடிப்பதால் இந்தியா 2 ஸ்பின்னர்களுடன் இறங்க வாய்ப்புள்ளது, விராட் கோலி நிச்சயம் ஜடேஜாவை அணியில் வைத்துக் கொள்ள விரும்புவார்" என்று பனேசர் தெரிவித்தார்.
அஷ்வின் எடுத்த மொத்த விக்கெட்டுகளில் 200 விக்கெட்டுகள் இடது கை பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அஷ்வினை ஆல் டைம் கிரேட் பட்டியலில் சேர்க்க முடியாது என்று மஞ்ச்ரேக்கர் கூறியுள்ள நிலையில் பனேசரின் இந்த மதிப்பீடு கவனிக்கத்தக்கதாக உள்ளது.