இந்தியா - இலங்கை டூர்!.. வெளியானது அட்டவணை!.. இந்திய அணியின் கேப்டன் யார் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சூழலில் இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது.
இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவும், இலங்கையில் டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடவும் ஒரே நேரத்தில் 2 அணிகளை சுற்றுப்பயணம் அனுப்புகிறது. தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, அங்கு முதலில் ஜூன் 18 - 22 வரை நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கிறது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இந்நிலையில், ஜூலை மாதத்தில் மற்றொரு இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. சீனியர் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ளதால், இலங்கை தொடரில் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு தொடர்களில் அசத்திய இளம் வீரர்கள் விளையாடவுள்ளனர்.
இதற்கிடையே, இந்த தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் ஜூலை 13ம் தேதி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும், டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வீரர்கள் அடங்கிய இந்த அணியை ஷிகர் தவான் தலைமை தாங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றிருப்பதால், இலங்கை தொடருக்கான அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படவுள்ளார். இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
