கடைசியில் மும்பையை ‘கால்குலேட்டர்’ தூக்க வச்சிட்டாங்களே KKR.. அந்த ஒரு ‘மிராக்கிள்’ நடந்தா MI ப்ளே ஆஃப் போக வாய்ப்பு இருக்கு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல ஒரே ஒரு வாய்ப்பு உள்ளது.
ஐபிஎல் (IPL) தொடரின் 14-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 54 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் 20 புள்ளிகளுடன் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணி முதல் இடத்திலும், 18 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 2-வது இடத்திலும், 16 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 3-ம் இடத்திலும் உள்ளன. இந்த மூன்று அணிகளும் ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த நிலையில், நேற்று ஷார்ஜாவில் நடந்த 54-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை எதிர்த்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 56 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 38 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இதில் கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை சிவம் மாவி 4 விக்கெட்டுகளும், லோக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்துக்கு கொல்கத்தா அணி முன்னேறியுள்ளது. அதேவேளையில் கொல்கத்தா அணியின் வெற்றியால் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஒருவேளை இந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியிருந்தால், நெட் ரன்ரேட் (Net Run Rate) அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல மும்பைக்கு வாய்ப்பு இருந்தது.
தற்போது மும்பை அணியின் நெட் ரன்ரேட் -0.048 ஆக உள்ளது. ஆனால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இதனால் கொல்கத்தா அணியின் நெட் ரன்ரேட் (+0.587) உயர்ந்துள்ளது.
இந்த சூழலில் மும்பை அணி தனது கடைசி லீக் போட்டியில் இன்று (08.10.2021) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
ஆனால் வெற்றி என்றால், சாதாரணமாக இல்லை, 171 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்த வேண்டும். அதற்கு மும்பை அணி முதலில் டாஸ் வெல்ல வேண்டும். பின்னர் 200 ரன்களுக்கு மேல் டார்கெட் வைக்க வேண்டும். இந்த மிராக்கிள் நடந்தால் மும்பை அணி ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது. அதுவே ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தால், மும்பை அணி ப்ளே ஆஃப் கனவை மறந்துவிட வேண்டியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.