‘என் மேல கோபமாக இருப்பீங்கன்னு தெரியும்’!.. ரசிகர்களிடம் ‘மன்னிப்பு’ கேட்ட பாகிஸ்தான் வீரர்.. ட்விட்டரில் உருக்கமான பதிவு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி ட்விட்டரில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இதன்மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக கோப்பையை வென்று ஆஸ்திரேலியா வரலாறு படைத்துள்ளது.
இந்த தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றும் என பலரும் கணித்தனர். அதுபோல் சூப்பர் 12 சுற்றின் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து பாகிஸ்தான் விளையாடியது. அப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைய அந்த அணி வீரர் ஹசன் அலியும் (Hasan Ali) ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. அதற்கு காரணம், கடைசி 9 பந்துகளில் 18 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியா இருந்தது. அப்போது களத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் சிக்சர், பவுண்டரிகளை விளாசி பாகிஸ்தானுக்கு தலைவலியாக இருந்தார். அதனால் அவரது விக்கெட் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
அப்போது சாஹின் அப்ரிடி வீசிய 19-வது ஓவரின் 3-வது பந்தில் மேத்யூ வேட்டின் கேட்ச் ஒன்றை ஹசல் அலி தவறவிட்டார். இதனால் அடுத்த 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் விளாசி ஆஸ்திரேலியாவை மேத்யூ வேட் வெற்றி பெற வைத்தார். இதன்காரணமாக ஹசன் அலி மீது பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். இது கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
میرا سینہ تیری حُرمت کا ہے سنگین حصار،
میرے محبوب وطن تُجھ پہ اگر جاں ہو نثار
میں یہ سمجھوں گا ٹھکانے لگا سرمایہِ تن،
اے میرے پیارے وطن 💚🇵🇰 pic.twitter.com/4xiTS0hAvx
— Hassan Ali 🇵🇰 (@RealHa55an) November 13, 2021
இந்த நிலையில் ஹசன் அலி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட் அவர், ‘என் மீது அனைவரும் கோபமாக இருப்பீர்கள் என்று தெரியும். நீங்கள் எதிர்பார்த்தை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆனாலும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள். நான் பாகிஸ்தான் அணிக்காக இன்னும் பெரிய அளவில் சேவை செய்ய விரும்புகிறேன். கடினமாக உழைத்து மீண்டும் பலத்துடன் வருவேன்’ என ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.