'ஒரு வேளை உண்மையா இருக்குமோ'?... 'ஏங்க இப்படி பீதியை கிளப்புறீங்க'... 'தோனிக்கு இதுதான் கடைசி சீசனா'?... ட்விஸ்ட் வச்சு பேசிய பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஏற்கனவே தோனி ஓய்வு பெற போகிறார் என சில தகவல்கள் பரவிய நிலையில், அதனை சிஎஸ்கே நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுத்தனர்.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியைத் தவிர்த்துவிட்டுப் பார்ப்பது என்பது மிகவும் கடினம். அதிலும் தோனி இல்லாத ஐபிஎல் போட்டிகளைக் கனவிலும் ரசிகர்களால் நினைத்துப் பார்க்க முடியாது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடந்துவரும் 14-வது ஐபிஎல் சீசனோடு தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இதுபோன்ற பல்வேறு வதந்திகள் உலாவந்த வண்ணம் இருந்த நிலையில் அவற்றை சிஎஸ்கே நிர்வாகம் முற்றிலுமாக மறுத்து வந்தது. ஆனாலும் அந்த வதந்திகள் ஓய்ந்தபாடில்லை. தோனியின் கட்டுக்கோப்பான உடல்வாகு, இளம் வீரர்களுக்கு நிகராக களத்தில் நின்று ஆடுவது போன்ற திறன்கள் அவரிடம் இருப்பதால் இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் அளித்துள்ள பேட்டியில், ''தோனி இந்த சீசனோடு ஓய்வு பெற்றுவிடுவார் என்று தோன்றுகிறது. அவருக்கு இந்த ஆண்டு ஐபிஎல் சீசன்தான் கேப்டனாகவும், வீரராகவும் கடைசி சீசனாக இருக்கும் என நம்புகிறேன். தோனியின் பேட்டிங் செய்யும் விதத்துக்கும், கால் நகர்த்தும் விதத்துக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. வருண் பந்துவீச்சில் தோனி ஆட்டமிழந்த விதம் அவர் பேட்டிங்கில் ஃபார்மை இழந்துவிட்டதாகவே தோன்ற வைக்கிறது.
எனவே இந்த ஆண்டு சீசன் முடிந்தபின் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கலாம். டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் நல்ல முடிவு. இதன்மூலம் சிஎஸ்கே அணியில் தோனி நிர்வாக ரீதியான பதவிக்கோ அல்லது சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கோ வருவதற்கு வழிவகை செய்யும்'' என பிராட் ஹாக் கூறியுள்ளார்.
இதற்கிடையே பிராட் ஹாக் கூறியுள்ள இந்த கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. தோனி பேட்டிங்யில் பெரிய அளவில் சோபிக்க முடியாமல் போனது மற்றும் வருண் பந்துவீச்சில் தோனி தனது விக்கெட்டை பறிகொடுத்தது போன்ற விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறியது. தற்போது அதே கருத்தை பிராட் ஹாக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.