ஏன் வார்னர் கிரவுண்டுக்கு கூட வரல..? SRH பயிற்சியாளர் ‘சூசகமாக’ சொன்ன பதில்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் இடம்பெறாதது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் (IPL) தொடரின் 40-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் (Sanju Samson) 82 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ஜேசன் ராய் (Jason Roy) 60 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் (Kane Williamson) 51 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் (David Warner) இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மேலும் போட்டியைக் காண மைதானத்துக்கு கூட வார்னர் வரவில்லை. இந்த சூழலில் போட்டி முடிந்தபின், இதுதொடர்பாக ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸிடம் (Trevor Bayliss) கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ட்ரெவர் பேலிஸ், ‘நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எப்படியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது என்பது தெரிந்துவிட்டது. அதனால் இதுவரை வாய்ப்புக் கொடுக்கப்படாத இளம் வீரர்கள் வாய்ப்பு கொடுக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
அடுத்து வரும் போட்டிகளில் இளம் வீரர்களை களமிறங்கி பரிசோதிக்க உள்ளோம். அதற்காக அனுபவ வீரர்கள் அனைவரும் ஹோட்டலில் அமர வைக்கப்படுவார்கள் என்று அர்த்தமில்லை. ஹைதராபாத் அணியில் ஏராளமான வீரர்கள் களமிறக்கப்படாமல் உள்ளனர். சிலர் இன்னும் ரிசர்வ் வீரர்களாகவே அணியில் தொடர்கின்றனர். அதனால் அவர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களின் திறமையை பரிசோதிக்க நினைக்கிறோம்.
இது அடுத்து வரவுள்ள 4 போட்டிகளுக்கு பின்பும் தொடருமா? என தெரியவில்லை. 18 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்தபின் அனுபவ வீரர்களுக்கு ஓய்வு கொடுப்போம். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. என்னைப் பொறுத்தவரை வார்னர் அடுத்து வரும் போட்டிகளில் பார்வையாளராக மட்டுமே பங்கு பெறுவார். இது அணியில் இருக்கும் மற்ற அனுபவ வீரர்களுக்கும் பொருந்தும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வார்னர் ஏராளமான பங்களிப்பை செய்துள்ளார். இந்த அணிக்காக அதிக ரன்களை அடித்துள்ளார். ஐபிஎல் ஏலம் நடைபெறுவதற்கு முன்னால் நடைபெறும் கடைசி சீசன் இதுதான். அதனால் பல சோதனை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது’ என ட்ரெவர் பேலிஸ் தெரிவித்துள்ளார்.
அதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் இனி வரும் போட்டிகளில் வார்னர் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. மேலும் ஐபிஎல் ஏலம், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு என மறைமுகமாக சில விஷயங்களை பயிற்சி ட்ரெவர் பேலிஸ் கூறியுள்ளார். அதனால் அடுத்து ஐபிஎல் சீசனில் டேவிட் வார்னர் ஹைதராபாத் அணியில் இடம்பெறுவது சந்தேகமாகியுள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதனால் அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
