VIDEO: பிராவோ கூட என்னங்க சண்டை..? ‘சிரிச்சிக்கிட்டே தோனி சொன்ன பதில்’.. அப்போ ஒவ்வொரு வருசமும் இப்படி நடக்குமா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் பிராவோவுடன் ஏற்படும் சண்டை குறித்து கேப்டன் தோனி விளக்கமளித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் (CSK), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கும் இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 70 ரன்களும், கேப்டன் விராட் கோலி 53 ரன்களும் எடுத்தனர்.
சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை பிராவோ 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளும், தீபக் சஹார் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி, 18.1 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 38 ரன்களும், அம்பட்டி ராயுடு 32 ரன்களும், டு பிளசிஸ் 31 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி (Dhoni), ‘இதற்கு முன்பு இந்த மைதானத்தில் போட்டி நடந்தபோது பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இன்றும் அப்படி நடந்துவிடுமா என்று பயந்தோம். நல்லவேளையாக நினைத்த அளவுக்கு பனியின் தாக்கம் இல்லை. ஆர்சிபி அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனாலும், 9 ஓவர்களுக்குப் பிறகு மைதானம் மெதுவாக இருந்ததால் ரன்கள் அதிகமாக செல்லவில்லை.
இக்கட்டான சூழலில் ஜடேஜா சிறப்பாக பந்துவீசினார். டிரிங்க்ஸ் பிரேக்கின்போது, மொயின் அலியிடம், நீங்கள் தொடர்ந்து பந்துவீச வேண்டும் எனக் கூறினேன். ஆனால், அதன்பிறகு அந்த முடிவினை மாற்றக்கொண்டு பிராவோவை கொண்டுவந்தேன். இந்த சூழ்நிலையில் தொடர்ந்து நான்கு ஓவர்களை வீசுவது கடினம். அதனால்தான், பிராவோவை முன்கூட்டியே கொண்டு வந்தேன். அது நல்ல பலன் தந்தது. ரன்களும் கட்டுக்குள் வந்தது’ எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய தோனி, ‘அணியில் உள்ள அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடுகின்றனர். இதுபோன்ற மைதானத்தில் வலது, இடதுகை பேட்ஸ்மேன் காம்பினேஷன்தான் சரிப்பட்டு வரும். சிஎஸ்கேவில் அதிகமான இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இது அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது’ என அவர் தெரிவித்தார்.
அப்போது பிராவோவுடனான (Bravo) மோதல் குறித்து வர்ணனையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த தோனி, ‘நான் அவரை சகோதரர் என்று தான் அழைப்பேன். ஒவ்வொரு வருடமும் இதேபோல் விளையாட்டாக சண்டை போட்டுக்கொள்வோம். பிராவோ எப்போதும் ஸ்லோ பால் வீசுவார். ஆனால், தற்போது அவர் ஸ்லோ பால் வீசுவதை அனைவரும் கணித்துவிடுகின்றனர். அதனால் யாக்கர், லெந்த் பால் என 6 பந்துகளையும் வேறுமாதிரி வீச வேண்டும். அப்போதுதான் பேட்ஸ்மேன் குழப்பம் அடைவார்கள் எனக் கூறினேன்’ என தோனி தெரிவித்தார்.
💬 💬 Captain Cool @msdhoni was wholesome in his praise for 'brother' @DJBravo47. 👏 👏#VIVOIPL | #RCBvCSK | @ChennaiIPL pic.twitter.com/PqcRcI12NQ
— IndianPremierLeague (@IPL) September 24, 2021
இப்போட்டியில் நீண்ட நேரமாக விராட் கோலி-தேவ்தத் படிக்கல் கூட்டணி சென்னை அணிக்கு சோதனை கொடுத்தது. அப்போது பிராவோ வீசிய 14-வது ஓவரில் விராட் கோலி ஆட்டமிழந்தார். இதுதான் போட்டியில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இப்போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக பிராவோவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
